“விக்கிரவாண்டியில் திமுக பெற்றது தோல்விகரமான வெற்றி” – தமிழிசை விமர்சனம் | Tamilisai condemns DMK Govt

1279890.jpg
Spread the love

சென்னை: “விக்கிரவாண்டியில் திமுக பெற்றது தோல்விகரமான வெற்றி. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று ஒரு கணக்கை வைத்து அதன் மூலம் வெற்றிபெற்று, அது தமிழக அரசுக்கு நற்சான்றிதழ் என்று சொல்கிறார்கள்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.

காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தமிழிசை சவுந்தர்ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காமராஜருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை ஒரு கட்சிக்கு இருக்குமென்றால் அது பாஜகவுக்குதான். வளர்ச்சிக்கும், ஊழலற்ற ஆட்சிக்கும் அடையாளமாக இருப்பவர் காமராஜர். அந்த வழியில்தான் மத்திய பாஜக அரசும் நடந்து கொண்டிருக்கிறது.

இன்று பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் முதல்வர் காலை உணவு திட்டம் குறித்த விளம்பரத்தை கொடுத்திருக்கிறார். அதில் உலகிலேயே முதல்முறையாக என்ற வார்த்தையை குறிப்பிட்டிருக்கிறார். மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் காலை உணவோடு கல்வி என்கிற ஒரு அம்சம் இடம்பெற்றுள்ளது. எனவே மத்திய அரசின் திட்டங்களை எடுத்து தாங்கள் செய்வதைப் போல முன்னிறுத்துவது தமிழக அரசின் வாடிக்கையாகி விட்டது. அதைத்தான் இப்போதும் செய்திருக்கிறார்கள்.

விக்கிரவாண்டியில் திமுக பெற்றது தோல்விகரமான வெற்றி. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று ஒரு கணக்கை வைத்து அதன் மூலம் வெற்றிபெற்று, அது தமிழக அரசுக்கு நற்சான்றிதழ் என்று சொல்கிறார்கள். நல்ல ஆட்சி எப்படி செய்யவேண்டும் என்பதை விட சூழ்ச்சி செய்து தேர்தலில் வெற்றிபெறுவதில்தான் அவர்களுடைய கவனம் இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

விக்கிரவாண்டி வெற்றி நல்ல ஆட்சியின் குறியீடு என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார். அது நல்ல ஆட்சியின் குறியீடு என்றால் கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை ஆகியவை மோசமான ஆட்சியின் குறியீடுதானே? ஆம்ஸ்ட்ராங் கொலையில் எய்தவர்களை காப்பாற்றுவதற்காக அம்புகளை கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே சரணடைந்த ஒருவரை என்கவுன்ட்டர் செய்ததன் மூலம் அங்கே உண்மை கொலை செய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *