விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட தி.மு.க. செயலாளருமான புகழேந்தி உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு ஜூலை10-ந் தேதி நடைபெற உள்ளது. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தி.மு.க.
தி.மு.க. சார்பில் தி.மு.க.வின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவாவும், நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
பா.ம.க.போட்டி
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம்! வெற்றி பெறுவோம்!.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
வேட்புமனு தாக்கல்
இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜூன் 14) தொடங்கிறது. வருகிற 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24-ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற வரும் 26-ம் தேதி கடைசி நாளாகும். அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
வேட்பு மனு தாக்கல் முதல் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கழுத்தில் பணமலை.. கையில் சில்லறை பையுடன் வந்து பரபரப்பு ஏற்படுத்தினார். அவரை தடுத்த பெண்போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டடதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் அவர் வேட்புமனுைவ தாக்கல் செய்தார்.
இதையும் படியுங்கள்: அமித்ஷா என்ன பேசினார்? தமிழிசை விளக்கம்