விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இந்தத் தொகுதியில் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று ஜூன் 10-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இடைத்தேர்தலில் திமுக சார்பில் கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலர் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கடந்த 20 நாள்களுக்கும் மேலாக விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவு பெற்றது.
276 வாக்குப் பதிவு மையங்கள்: விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.
இடைத்தேர்தலுக்காக மொத்தம் 276 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 42 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றம் நிறைந்தவையாகவும், 3 வாக்குப் பதிவு மையங்கள் மிகவும் பதற்றம் நிறைந்தவையாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு, நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் இணையவழி கண்காணிப்பு (வெப்) கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து நிகழ்வுகளையும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மு.சந்திரசேகர் தலைமையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை சரிபார்க்கப்பட்டு, வாக்குப் பதிவு மையங்களுக்கு வாகனங்களில் அனுப்பிவைக்கப்பட்டன.
1,104 இயந்திரங்கள் பயன்பாடு: 276 வாக்குப் பதிவு மையங்களில் 552 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இரண்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன), 276 கட்டுப்பாட்டுக் கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகள் 276 (விவிபேட்) என மொத்தம் 1,104 இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
தேர்தல் பணியில் 1,355 பேர்: தேர்தல் பணியில் மொத்தம் 1,355 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கு வாக்குப் பதிவு மையப் பணியிட ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கணினி மூலம் வழங்கப்பட்டது.
3,000 போலீஸார்: வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் நரேந்திரன் நாயர் தலைமையில், விழுப்புரம் சரக காவல் துணைத் தலைவர் திஷா மிட்டல் மற்றும் 3 எஸ்.பி.க்கள் மேற்பார்வையில், 2,800 போலீஸார், 220 மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் என மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜூலை 13-இல் வாக்கு எண்ணிக்கை
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பின்னர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.
தொடர்ந்து, அந்த அறைக்கு “சீல்’ வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.
ஜூலை 13-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.