முதலில் இலவசம் என அறிவித்துவிட்டு ஒரு சில நாட்களிலேயே கட்டணம் வசூலிக்கக் காரணம் என்ன என மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம்.
“காலை 8:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை ஒவ்வொரு ஒன்றரை மணி நேர ஸ்லாட்டுக்கும் 60 பேர் என ஒரு நாளைக்கு 360 பேரை இலவசமாக அனுமதிக்க திட்டமிட்டிருந்தோம்.
பார்வையாளர்கள் அதற்கு இணையத்தில் பதிவுசெய்ய வேண்டும். ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால் பதிவு செய்யும் பார்வையாளர்களில் பலர் நேரில் பார்வையிட வருவதில்லை.
அதனால் உண்மையிலேயே பார்க்க விரும்புவோரால் பார்க்க முடியாமல் போகிறது. அதனால்தான் குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறோம். கட்டணம் கொடுத்து பதிவு செய்பவர்கள் தவறாமல் பார்வையிடவும் வருவார்கள்” என்றனர்.

“மாநகராட்சி அதிகாரிகளின் விளக்கம் முறையானதாக இல்லை. சென்னை மெரினாவில் கலைஞர் உலகம் என்கிற மையமும் இலவசமாக இணையத்தில் பதிவு செய்து பார்வையிடும்படிதான் இயங்குகிறது. இத்தனை ஆண்டுகளாக அந்த நினைவிடம் இயங்குகையில், இந்த விக்டோரியா அரங்கை மட்டும் ஒரு சில நாட்களில் கட்டணமாக மாற்றுவதன் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
அரங்கம் இப்போதுதான் திறக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி விளம்பரம் செய்து மக்களை உள்ளே இழுக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. மேலும், தொடக்கத்தில் ஒரு சில நாட்களில் வரவேற்பு இல்லை எனக் கட்டணமாக மாற்றுவதும் முறையற்றது.
இனிதான் பொங்கல் விடுமுறையெல்லாம் வருகிறது. அப்போது அதிகப்படியான மக்கள் விக்டோரியா அரங்கைப் பார்வையிட நினைப்பார்கள். அந்தச் சமயத்தில் கட்டணம் வசூலித்தால் அது மக்களின் வருகையைக் குறைக்கத்தான் செய்யும்” என வருந்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
யோசிக்குமா மாநகராட்சி?