விசாரணை என்ற பெயரில் கொடூர சித்திரவதை ; பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை. | NHRC inquiry police torture case

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை விசாரணை என்ற பெயரில் ஆந்திர காவல்துறையினர் சித்திரவதை செய்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை செய்து வருவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஜூன் 2023-ல், திருட்டு வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியாண்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், சிறார் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை ஆந்திரா மாநிலம் சித்தூர் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விசாரணையின் போது தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக சித்திரவதை செய்தும், பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டும், பிறப்புறுப்பில் மிளகாய்த்தூள் கொட்டி கொடூரமான முறையில் சித்திரவதை செய்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் எழுப்பினர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போலீஸ் சித்திரவதை

போலீஸ் சித்திரவதை

பாதிக்கப்படவர்கள் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் உட்பட 6 காவலர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டபிரிவுகளில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்பு ஆந்திர மாநில காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கொடூரமான சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

அதைத் தொடர்ந்து வழக்கை பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம், எஸ்.பி யுவராஜ் தலைமையிலான மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் புளியண்டபட்டி கிராமத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *