மதுரை: “எங்களது கட்சியை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும்” என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி நம்பிக்கை தெரிவித்தார்.
நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுகவை ஆட்சியிலிருந்து விரட்ட யாருடனும் கூட்டணி வைப்போம் என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது, அவருடைய விருப்பம். கடந்த நான்கு ஆண்டுகள் ஆட்சியில், எண்ணற்ற நலத்திட்டங்களை திமுக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. திமுக கூட்டணிக்கு பொது மக்களின் ஏகோபித்த ஆதரவு வழக்கம்போல கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆட்சியில் விசிகவுக்கும் பங்கு என சொல்லக் கூடாது என்பது இல்லை. சொல்லக்கூடிய நேரத்தில் சூழலை பொறுத்து கோரிக்கை வைப்போம். எங்களைப் பொறுத்தவரையில் கட்சி, நாட்டு நலனை கருத்தில் கொண்டு தான் முடிவெடுத்தோம். இனிமேலும் முடிவெடுப்போம். எங்களது கட்சியை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும். இதைக் கணித்து எல்லாம் சொல்ல முடியாது. மாநில கட்சியாக மக்கள் அங்கீகரித்து இருக்கின்றனர். ஓர் அதிகார வலிமை உள்ள கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மன்னிப்பு கேட்கவில்லை. வருத்தமும் தெரிவிக்கவில்லை. சொன்ன வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார். அவருடைய பேச்சு அநாகரிக செயல். அதை வரவேற்கக் கூடிய வகையில் தமிழக பாஜக பேசுவது அதைவிட அநாகரிகமானது. மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கிறது என தேசிய அளவில் அனைவரும் உணரவேண்டும்.
வட இந்தியாவில் இருந்து வரும் அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. நாம் ஆங்கிலத்தில் பேசினாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆங்கிலத்தை அவர்கள் இன்னொரு மொழியாக கற்கவில்லை என்பது எனது கருத்து. ஒரு மொழி கொள்கையையான இந்தி பேசக் கூடியவர்கள் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர முயற்சிக்கின்றனர். தமிழக மாணவர்களை அறிவாளிகளாக மாற்றுவதற்கு அல்ல.
இந்தியை பேச வேண்டும் என்பதற்காகவே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என அவர்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. இந்தியை யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொடுக்கட்டும். பிற பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. இந்தியை திணிப்பதை எதிர்க்கிறோம்.
தென் மாவட்டங்களில் சாதி ரீதியான கொலை நடக்கின்றது. குறிப்பாக மதுரை ,சிவகங்கை பகுதிகளில் சிறுவர்களை கொலை செய்கின்றனர். மாணவர்களை தாக்கும் சம்பவமும் நடக்கிறது. சாதிய மோதல்களை தடுக்க புலனாய்வு ரீதியான அமைப்பை ஏற்படுத்தவேண்டும். இது பற்றி சட்டமன்ற கூட்டத் தொடரில் அரசிடம் வலியுறுத்துவோம்” என்று அவர் கூறினார். விமான நிலையத்தில் அவரை மாநில துணை பொதுசெயலாளர் கனியமுதன், கொள்கை பரப்பு துணை பொதுச் செயலாளர் செல்லப்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.