“விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க பாமக, பாஜகவுக்கு அழைப்பு இல்லை” – திருமாவளவன் | PMK, BJP not invited to participate in VCK Alcohol Prohibition Conference – Thirumavalavan

1309376.jpg
Spread the love

கள்ளக்குறிச்சி: “உளுந்தூர்பேட்டையில் அக். 2-ம் தேதி நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் பங்கேற்கலாம். பாமக மற்றும் பாஜகவுக்கு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் 11 பேருக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக இன்று (செப்.11) கள்ளக்குறிச்சிக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், 11 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தற்போதைய வாழ்வாதாரம் குறித்தும், மதுவினால் ஏற்படும் பாதிப்பும் குறித்தும் பேசவைத்தார்.

அப்போது ஒருவர், தனது தந்தை கள்ளச் சாராயம் அருந்தி கண் பார்வை பறிபோனதால் அரசு வழங்கும் நிவாரணம் ரூ.50 ஆயிரம் வழங்காமல் அலைக்கழிப்புச் செய்து வந்ததாகவும், திருமாவளவன் வருகிறார் என்ற செய்தியறிந்து, நேற்று வருவாய் துறையினர் வீட்டுக்கே வந்து ரூ.50 ஆயிரத்தை வழங்கிச் சென்றதாகவும் தெரிவித்தார். மதுவினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்றார்.

லட்சுமி என்ற பெண் பேசுகையில், “நானும் எனது கணவரும் காதல் திருமணம் புரிந்துகொண்டு வாழ்ந்தோம். தற்போது கணவர் கள்ளச் சாராயத்தால் உயிரிழந்து விட்டார். எனக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். இந்த நிலையில் நான் யாருமில்லாத ஆதரவற்ற நிலையில் நிற்கிறேன். எனவே, அரசு மதுக் கடைகளை மூடவேண்டும்” என வலியுறுத்தினார். இதுபோன்று 25 பேர் பேசினர்.

நிறைவாக பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “மது ஒழிப்பின் அவசியம் என்ன என்பதை கருணாபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரல் உணர்த்துகிறது. எனவே, தென் மாவட்டங்களில் இருந்து வருவோரும், வடமாவட்டங்களில் இருந்து வருவோரும் எளிதாக மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அக்டோபர் 2-ல் மது ஒழிப்பு மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு பேசிய பலரின் அழுகுரல் கண்கலங்கச் செய்கிறது. இங்கு பேசிய ஒருவர், கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த தனது தந்தையின் சடலத்தை தீ மூட்ட மது வாங்கிக் கொடுத்தால் தான் தீ மூட்டுவேன் என்று சொல்லி இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. பள்ளிக்குச் செல்லும் 12 வயது சிறுவன் முதல் மது அருந்துவதாக இங்கு வந்திருந்த தாய்மார்கள் கண்ணீர் மல்க கூறினர். இதனால் இளைஞர்களின் மனித சக்தியை இந்தியா இழக்கிறது. இங்கு பேசிய பலரும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்கின்றனர்.

எனவே தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கிறது. இந்த மாநாட்டில் கருணாபுரத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடவில்லை. தேர்தல் காலத்தில் தான் தேர்தல் குறித்து முடிவெடுக்க வேண்டும். கூட்டணி என்பது வேறு, அரசியல் என்பது வேறு.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை பல்வேறு தரப்பினரும் கூட்டணியுடன் முடிச்சுப் போடுகிறார்கள். விவாதிக்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேசவேண்டும். தற்போது மக்களுக்கான பிரச்சினை எனும்போது, அதற்காக குரல் கொடுக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தில் 47-வது ஷரத்தில் மது விலக்கு குறித்து அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது தேசிய அளவிலான பிரச்சினை. எனவே தேசிய அளவில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை மத்திய பாஜக அரசுக்கும் வலியுறுத்துகிறோம்.

ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் கோரிக்கை மாநாடு இது. எனவே இந்த மாநாட்டில் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் திமுகவும் மது விலக்கில் எங்கள் நிலைப்பாட்டைக் கொண்ட அதிமுகவும் பங்கேற்கலாம்” என்று பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், “மது ஒழிப்பில் தீவிரம் காட்டும் பாமகவையும் மாநாட்டுக்கு அழைப்பாக கருதலாமா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “பாமக, பாஜகவுக்கு மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு இல்லை. திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் பங்கேற்கலாம்” என்று தெரிவித்தார்.

கட்சி அரசியல் வேறு… – இமானுவேல் சேகரன் 67-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, விழுப்புரத்தில் தியாகி இமானுவேல் சேகரன் புகைப்படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மதுவை ஒழிக்க மகளிரின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதால் மது போதை ஒழிப்பு மாநாடுநடத்தப்படுகிறது. கட்சி அரசியல் என்பது வேறு. சமுகம் மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேறு .

மதுவை ஒழிக்க அனைவரும் எங்களுடன் போராட வேண்டும். மக்கள் நலன் சார்ந்து செயல்படவேண்டியுள்ளதால் அனைவரும் இணைந்து மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற வேண்டும். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துள்ளபோது படிப்படியாக ஏன் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரஇயலாது? இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்புபோன்றவ்ற்றில் தமிழகம் முதன்மையானவையாக இருக்கும்போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையானவையாக இருக்கக் கூடாது?

தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாடை முடிச்சிப் போட வேண்டாம். இது எல்லோரும் இருக்கிற மது ஒழிப்பு மாநாடு . கூட்டணியில் இருந்தாலும் பிரச்சனைகள் இருந்தால் எதிர்த்து போராடுவோம். அதன்படி அதிமுக மது ஒழிப்பு மாநாட்டுக்கு வந்து மேடையில் பேசலாம். பாஜகவுக்கும் பாமகவுக்கும்தான் நாங்கள் அழைப்புவிடுக்கவில்லை. அவர்கள் மதவாத, சாதியவாத கட்சி என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *