மதுரை: “கள்ளக்குறிச்சியில் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டை அரசியல் நாடகமாகவே நான் பார்க்கிறேன்,” என்று முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக மதுரையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி, தேசத்துக்கு போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணித்து சொற்பொழிவாற்ற திட்டமிட்டுள்ளேன். சமூக வலைதளங்களில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான வரலாறு சென்றடைவதை மாற்றி உண்மை வரலாற்றை மக்களை சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளேன்.
முக்குலத்தோர் புலிப்படை என்பது அமைப்பு. நான் இந்திய குடிமகனாக ஜிஎஸ்டியை ஏற்கிறேன். சம்பாதித்ததில் 18% ஜிஎஸ்டி வரியாகக் கொடுக்கிறேன். ஆனால், அதை நாட்டு மக்களுக்காக செலவிடவில்லை. அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் உண்மையைப் பேசியதை சகித்துக்கொள்ள முடியாமல் மன்னிப்பு கேட்க வைப்பது சர்வாதிகார போக்கு. இதை ஒட்டுமொத்த தமிழக மக்கள், தமிழக வியாபாரிகளுக்கு நேர்ந்த அவமானமாகவே கருதுகிறேன்.
பிரதமர் ட்விட்டர், பேஸ்புக்கில் கருத்துச் சொல்கிறார். அதற்கு நாங்களும் சமூகவலைதளங்கள் மூலம் பதில் அளிக்கிறோம். நான் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக எதிர்க்கிறேன். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழக மாணவர்களை ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் நுழையவிடாமல் செய்யும் முயற்சி இது. இக்கொள்கை தமிழகத்துக்கு தேவையில்லை. பாஜக என்பது ஏமாற்றுக் கூட்டம்.
இலங்கை படுகொலை போன்று தமிழகத்துக்கும் ஒரு நாள் அந்த நிலை வரும் என்ற ஐயம் உள்ளது. தமிழக மீனவர்கள் அந்நியமாக பார்க்கப்படுவது போல தமிழக மக்களை பிற மாநில மக்கள் வேறுபடுத்தி பார்க்கும் சூழல் உள்ளது.
விஜய் அரசியலில் சாதிப்பது அவ்வளவு எளிதல்ல. அவரது கொள்கை, சிந்தாத்தம் என்னவென்று சொல்லட்டும் பிறகு பார்ப்போம்.
விசிக மது ஒழிப்பு மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு இல்லை. சாதி, மத அமைப்புகளுக்கு அழைப்பு இல்லை என்கிறார் திருமாவளவன். இவ்வளவு நாள் அவர் என்ன செய்தார்? சாதி, மதம், கட்சி வேறுபாடுகள் இன்றி அனைவரையும் தமிழர்களாக இணைத்து அவர் மாநாடு நடத்தவேண்டும். கள்ளக்குறிச்சியில் அவர் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்ட ஓர் அரசியல் நாடகமாகவே நான் பார்க்கிறேன்.” என்று அவர் கூறினார்.