சென்னை, மே 6-
ஐ.பி.எல்.தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை சென்னைஅணி 11 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில்(6-ந்தேதி நிலவரப்படி) உள்ளது. தல டோனி கடைசி கட்டத்தில் இறங்கி விளாசி ரன்குவித்து வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
விசில் பரிசு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விசிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சென்னை அணியின் விசில் போடு தாரகமந்திரமாக ஒலித்து வருகிறது. சென்னை அணி களமிறங்கும் மைதனாம் முழுவதும் விசில் சத்தம் விண்ணை பிளந்து வருகிறது.
இதேபோல் சென்னை நகரத்தில் மாநகர பஸ்களின் சேவை அதிக அளவில் உள்ளது. அதில் கண்டக்டர்களின் விசில் சத்தமும் அனைவருக்கும் பரிட்சயமான ஒன்றுதான்.
ஐ.பி.எல். இறுதி போட்டி நெருங்கி வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது விசில் சத்தத்தை மேலும் ஓங்கி ஒலிக்க வைக்க புதிய முயற்சியை எடுத்து உள்ளது.
பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தில் சென்னை நகரப்பகுதியில் செல்லும் மாநகர பஸ் கண்டக்டர்களுக்கு தற்போதுள்ள பிளாஸ்டிக் விசில்களுக்குப் பதிலாக 8 ஆயிரம் தரமான உலோகத்திலான(மெட்டல்) விசில்களை வழங்க உள்ளது. இதனால் இனி சூப்பர்கிங்ஸ் அணியின் விசில் சத்தம் சென்னை மாநகர் முழுவதும் மாநகர் பஸ்களில் பட்டய கிளப்ப போகிறது.
மகிழ்ச்சியடைகிறோம்
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறியதாவது:-
மாநகர பஸ் கண்டக்டர்களுக்கு விசில் வழங்குவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மகிழ்ச்சி அடைகிறது. இந்த விசில் எப்போதும் சி.எஸ்.கே. மற்றும் சென்னையுடன் இணைந்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க உலோக விசில் ஒரு சிறிய படியாகும். இந்த விசில் நீண்ட காலம் நீடிக்கும்.
“இந்த சீசனில் மாநகர போக்குவரத்து கழகத்தின் உடனான எங்களின் சிறப்பு கூட்டாண்மையால் ஏராளமான ரசிகர்கள் ஏற்கனவே பயன் அடைந்துள்ளனர். சென்னை பாட்டி நாட்களில் டிக்கெட்டுகளுடன் ரசிகர்கள் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். பொதுமக்கள் மற்றும் மாநகர பஸ்கண்டக்டர்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
மாநகர பஸ்சில் இலவச பயணம்
சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நடைபெறும் நாளன்று ரசிகர்களின் வசதிக்காக சி.எஸ்.கே. அணி நிர்வாகம் மாநகர் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்களின் போது டிக்கெட்டுகளை வைத்திருக்கும் ரசிகர்கள், போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இருந்தே மாநகர பஸ்களில் (ஏ.சி.அல்லாத) இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் 2-வது குவாலிபையர் போட்டி வருகிற 24-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதேபோல் வருகிற 26-ந்தேதி இறுதிப்போட்டியும் சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.