விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்: சுமுக தீர்வு ஏற்படுத்த தொழில்துறையினர் கோரிக்கை | Power loom owners protest Industry members demand amicable solution

1355665.jpg
Spread the love

கோவை: கூலி உயர்வு கோரி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் தற்போது வரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நூல் தேக்கம் அடைந்துள்ளதாகவும், இருதரப்பினருக்கும இடையே சுமுக தீர்வு விரைந்து ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை மாவட்ட ஆட்சியரிடம், ஜவுளித்தொழில்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் தலைமையில் ஜவுளித்தொழில்துறையினர் இன்று (மார்ச் 25) கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவரை நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து ‘ஆர்டிஎப்’ தலைவர் ஜெயபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் 8 லட்சம் ரோட்டார் திறன் கொண்ட 650 ஓபன் எண்ட் நூற்பாலைகளும், 1.9 கோடி ஸ்பிண்டில் திறன் கொண்ட 1,700 நூற்பாலைகள உள்ளன.

இவற்றில் உற்பத்தி செய்யப்படும் நூல் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 5.5 லட்சம் விசைத்தறிகள், 2.5 லட்சம் ஆட்டோ லூம்கள், 5,700 ஆயத்த ஆடை நிறுவனங்கள், 1.87 கைத்தறி நிறுவனங்கள் உள்ளன. 17 மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி செய்து வருகின்றனர். தமிழகத்திலேயே கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தான் அதிகளவு ஓபன் எண்ட் நூற்பாலைகள், ஸ்பின்னிங் மில்கள், விசைத்தறி ஆயத்த ஆடை நிறுவனங்கள் உள்ளன.

நூலை கொள்முதல் செய்து சைசிங், டையிங், நிட்டிங், வீவிங், பிரிண்டிங், காஜா, பட்டன் ஸ்டிச்சிங், பேக்கிங், அயர்னிங் என பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இவ்விரு மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஜாப் ஒர்க் செய்து தருபவர்களுக்கு இடையே விலை பேசியே பெரும்பாலும் தொழில் நடத்தி வருகின்றனர். காடா உற்பத்தி செய்து வரும் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் இடையே மட்டும் ஜாப் ஒர்க் கட்டணம் தொடர்பாக கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே அரசு தலையிட்டு சமரசம் செய்யும் நிலை உள்ளது.

நிரந்தர தீர்வு ஏற்படாமல் கடந்த 2014 கட்டணம் கிடைக்கவில்லை, 2022 ஒப்பந்தம் செயல்படுத்தவில்லை என தற்போது உற்பத்தி நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் நூற்பாலைகள் தொழில்துறையினர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். ஸ்டிரைக் தொடங்கும் முன் ரூ.10 முதல் ரூ.15 வரை விலை குறைத்து வாங்குவதும் ஸ்டிரைக் அறிவிப்புக்கு பின் மேலும் விலை குறைவாக கேட்பதால் தற்போது வரை தினமும் ரூ.30 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு, ரூ.100 கோடிக்கு மேல் நூல் தேக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே விரைவில் சுமுக தீர்வு ஏற்படுத்தி தர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *