விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் “விடியா ஆட்சி உங்கள் வீட்டு பில்-லே சாட்சி” என்ற தலைப்பில், விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முன்னாள் முதல்வர் எடப்பாடி சந்திக்கச் சென்றாரா என செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும், கரூர் துயர சம்பவத்தையும் சம்பந்தப்படுத்தி பேசுவது நகைப்பிற்குரியதாக உள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது போராட்டத்தில் ஏற்பட்டது. கரூர் சம்பவம் அப்படியல்ல. கூட்டத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் விஜய்யைப் பார்க்க வந்து உயிரிழந்தவர்கள். தி.மு.க-விற்கும் த.வெ.க-விற்கும் போட்டி என செங்கோட்டையன் கூறுவது, பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டது என நினைப்பதுபோல் உள்ளது. யார் யாருக்குப் போட்டி என்பதும், ஒவ்வொரு கட்சிகளின் வண்டவாளம் தண்டவாளங்களெல்லாம் தேர்தலுக்குப் பின்னர்தான் தெரிய வரும்.