“விஜய்க்கும், திருமாவளவனுக்கும் ஒரே கொள்கைதான்” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா கருத்து  | Aadhav Arjuna meets Thirumavalavan after joing TVK

1349118.jpg
Spread the love

சென்னை: விஜய்க்கும் , விசிக தலைவர் திருமாவளவனுக்கும் ஒரே கொள்கைதான் என்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜன.31) அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

தவெகவில் இணைந்த சில மணி நேரங்களில் சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் வந்த ஆதவ் அர்ஜுனா அங்கு திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எங்கு கள அரசியலை கற்றுக் கொண்டேனோ அங்கு வந்து என் ஆசான் திருமாவளவனிடம் ஒரு தனயனாக வாழ்த்து பெற்றேன். பெரியார் மற்றும் அம்பேத்கருடைய கொள்கைகளை திருமாவளவனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். இந்த பயணத்தில் எந்த முடிவு எடுத்தாலும் என் ஆசானிடம் கலந்துரையாடி என் பயணத்தை தொடங்குவேன் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். அதன் வெளிப்பாடாகத்தான் இந்த சந்திப்பு.

கொள்கைரீதியாக என்னுடைய பணி மக்களுக்கானதாக எப்போதும் இருக்கும். அதிகாரத்தை அடைவதற்கான பயணத்தில் கொள்கைப்படி அரசியலை உருவாக்குங்கள் என்பதுதான் திருமாவளவன் எனக்கு கொடுத்த அறிவுரை. எங்களுக்கும் திருமாவளவனுக்கும் கொள்கை அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. நாங்கள் எதிரெதிர் துருவம் அல்ல. தவெக தலைவர் விஜய்க்கும் சரி, விசிக தலைவர் திருமாவளவனுக்கும் சரி, ஒரே கொள்கைதான்” இவ்வாறு ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

விசிக துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதனையடுத்து சில வாரங்களுக்குப் பிறகு ஆதவ் அர்ஜுனாவை விசிகவிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

பின்னர் விசிகவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த ஆதவ் அர்ஜுனா, வேங்கைவயல் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த அவர், இன்று அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *