விஜய் விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றி அவரை பெரியாளாக்கி விடவேண்டாம் என்று நினைத்து மிகவும் ஜாக்கிரதையாக வார்த்தைப் பிரயோகங்களைச் செய்து வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், அதையெல்லாம் அப்படியே கவிழ்த்துப் போட்டிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
அரசியலில் அடியெடுத்து வைத்ததுமே தனது முதல் எதிரியாக திமுக-வை தான் குறித்து வைத்துத் தாக்கினார் விஜய். ஆளும் அதிகாரத்தில் இருக்கும் திமுக தனது கூட்டணியையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதால் அந்த மாளிகையின் மீது கல் வீசினால் தான் ஏதாவது காரிய பலம் கிட்டும் என விஜய்க்கு பாலபாடம் படிக்கப்பட்டது. அதன்படியே அவர் திமுக-வையும் ஸ்டாலினையும் மிகக் கடுமையாக சாட ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் இந்த சாடல்கள் எல்லை மீறிப்போய், “ஸ்டாலின் அங்கிள்” என்றும், “சி.எம் சார்” என்றும் கிண்டலடித்ததை பார்த்துவிட்டு திமுக-வினர் கொதித்தே போனார்கள். இதையடுத்து, கீழ்மட்டத் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் விஜய்யை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்களோ, அமைச்சர்களோ விஜய்க்கு பதில் சொல்வதையும் தவெக-வை விமர்சிப்பதையும் பொதுவாக தவிர்த்தார்கள். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் செந்தில் பாலாஜியையும், தங்கள் அரசையும் தவெக-வினர் கடுமையான வார்த்தைகளில் தாக்கியதையும் பொறுத்துக் கொண்டது திமுக.
இப்படியான நிலையில்தான், துணை முதல்வர் உதயநிதி தற்போது இந்த ஆட்டத்தை முழுமையாகக் கலைத்துப் போட்டிருக்கிறார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற ‘திமுக 75 அறிவுத் திருவிழா’வில் பேசிய உதயநிதி, “அரசியலில் சிலர் அடித்தளமே இல்லாமல் உள்ளே வர முயற்சிக்கின்றனர். பொருட்காட்சியில் தாஜ்மஹால், ஈஃபிள் டவர் செட் போட்டால் அதைப் பார்க்க கூட்டம் கூடத்தான் செய்யும். ஆனால், சும்மா தட்டினாலே போதும், அதெல்லாம் விழுந்துவிடும். அத்தனையும் வெறும் அட்டை” என்று தவெக-வை மறைமுகமாக விமர்சித்தார்.
எப்போது திமுக தலைவர்கள் தங்களை விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த தவெக-வினர், உதயநிதியின் அட்டாக்கை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். இதற்கும், “திமுக-வை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்கமுடியாது” என்று கர்ஜித்த முதல்வருக்கும் சேர்த்து, எக்ஸ் தளத்தில் தானே பதில் கொடுத்த விஜய், ‘ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி’ என்று திமுக-வை கடுமையாக விமர்சித்ததுடன், ‘இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தவெக-வை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகி விட்டது. பவளவிழா பாப்பா – நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா, நீ நல்லவர் போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா’ என்று போட்டுத் தாக்கினார்.
விஜய்க்கெல்லாம் பதில் சொல்லி அவரை பெரியாளாக்க வேண்டாம் என்ற திமுக தலைமையின் உறுதியை உதயநிதி குலைத்துப் போட்டதற்குப் பின்னால் முக்கியமான அரசியல் கணக்கு இருக்கிறது என்று சொல்லும் அரசியல் பார்வையாளர்கள், “தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசியலில் தவெக தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறது. அதிலும், திமுக-வுக்கும் தங்களுக்கும் தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் விஜய் சொல்லி வரும் நிலையில், அதை வைத்து உதயநிதியை முன்னிலைப்படுத்த திமுக திட்டமிட்டிருக்கிறது.
உதயநிதி இப்படி பேசி இருப்பதன் மூலம் தமிழக அரசியலில் ‘விஜய்க்கு எதிர் உதயநிதி’ என்கிற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஸ்டாலினுக்கு எதிர் விஜய் என்பதை விட உதயநிதிக்கு எதிர் விஜய் என்பது எதிர்கால திமுக அரசியலுக்கு சரியாக இருக்கும் என்பது அவர்களது கணக்கு. அதன் விளைவு தான் உதயநிதியின் சீண்டல். இதன்மூலம் விஜய்யை எதிர்க்க உதயநிதி தான் சரியான சாய்ஸ் என்ற கருத்தை திமுக-வினர் மத்தியிலும் விதைக்கிறார்கள். திமுக தலைமை எதிர்பார்ப்பது போல், பிற்காலத்தில் இவர்கள் இருவருக்குமான களமாகவும் தமிழக அரசியல் மாறலாம்” என்கிறார்கள்.