சென்னை: விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது எனவும் தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தை அவருக்கு வழங்குவது எனவும் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானத்தை கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் வாசித்தார். மேடைக்கு வந்த மதியழகனை விஜய் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். “தமிழகத்தில் புதிய மற்றும் நேர்மையான அரசியல் அதிகார மாற்றத்தை ஏற்படுத்தும் உன்னத லட்சிய நோக்கத்தின் செயல்வடிவத்தின் முதல்படியாக நம் தலைவர் விஜய், மக்கள் சந்திப்புப் பயணத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய ஊர்களில் நம் தலைவரின் அனல் பறக்கும் பேச்சும் ஆளும் தரப்பை நோக்கிய கேள்விகளும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசியல் வரலாறு இதுவரை காணாத இந்திய அரசியல் அரங்கத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மக்கள் அளித்த வரவேற்பு இருந்தது. இது ஆள்வோருக்கும் அதிகார வெறி கொண்டோருக்கும் எரிச்சலூட்டியது. 2025 , செப். 27-ம் தேதியன்று 3-வது கட்டமாக நாமக்கல் மக்கள் சந்திப்பை முடித்து கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் திட்டமிட்டு கற்பனைக்கும் எட்டாத வகையில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் இன்னபிற செயற்கையான குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டனவோ என்று எண்ணத்தக்க வகையில் அசம்பாவிதம் நிகழந்தது. அதில் 41 பேர் பலியாகினர்.
தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்கள் அரசியலை மையமாகக் கொண்ட நம் லட்சிய பயணத்தில் பங்கெடுத்துக்கொள்ள வந்து உயிர் நீத்த நம் சொந்தங்களான அந்த தியாகிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை இந்த பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது” என முதல் தீர்மானத்தை வி.பி. மதியழகன் வாசித்தார்.
இரண்டாவது தீர்மானத்தை திருப்பூர் மாநகர மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி பாலமுருகன் வாசித்தார். “அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையே நம் நெஞ்சைவிட்டு அகலவில்லை. அதற்குள் கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்ற செய்தி தமிழகத்தையே பதற வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
தொடர்ந்து இதுபோன்ற கொடுமைகள் நடந்த வண்ணம் இருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே, பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து துன்பம் நேருகிறதே. காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் தூக்கம் களைந்து எப்போது எழுவார் என்றும் தெரியவில்லை. இந்த வெற்று விளம்பர திமுக ஆட்சியில் தமிழ்நாடே தலைகுணிந்து நிற்கிறது என்பதைக் கூறுவதோடு சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களை இந்த சிறப்பு பொதுக்குழு பதிவு செய்கிறது” என இரண்டாவது தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை நிறுத்த வேண்டும், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து மூட்டையிலேயே முளைத்து வீணாகும் நிலைக்குக் காரணமான, விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்குக் கண்டனம்,
வட கிழக்குப் பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால்களைச் சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட ராம்சர் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்டத் தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும், மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விஜய்யை காண வரும் பொதுமக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும், தமிழக தொழில் துறைக்கு வந்திருக்கும் முதலீடுகள், அவற்றின் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.