சென்னை: “பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. பாசிசம் என்னால் என்னவென்று அவர் உணர்ந்திருக்கிறார் என்று தெரியவில்லை. விஜய்யின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் தெரிகிறது” என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
திங்கள்கிழமை (அக்.28) செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “நடிகர் விஜய் ஒரு முன்மொழிதலை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியிருக்கிறார். அவை அனைத்துமே பல்வேறு கட்சிகளால் முன்மொழியப்பட்டவைதான். ஒன்றைத் தவிர. கூட்டணி ஆட்சிக்கு அவர் அச்சாரம் போட்டிருக்கிறார். ஆனால் ஆட்சிக்கு ஒருவேளை வரும் சூழலில் இந்த நிலைப்பாட்டை அவர் எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எங்களுக்காக வைக்கப்பட்ட கோரிக்கை என்பதை நாங்களே கற்பனை செய்துகொள்ள முடியாது. திமுகவை பொது எதிரி என்று அறிவித்திருப்பதும் திமுக கூட்டணியை குறிவைத்திருப்பதும் தான் நடிகை விஜய்யின் ஒட்டுமொத்த உரையின் சாரம். என்னைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது.
அதே போல பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்திருக்கிறார். பாசிசம் என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜகவை அடையாளப்படுத்தும் ஒரு சொல். பாசிச எதிர்ப்பு என்றால் பாஜக எதிர்ப்புதான். பாஜக எதிர்ப்பை அவர் நையாண்டி செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அவருடைய கருத்துக்கு அது முரண்பாடாக இருக்கிறது. பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. பாசிசம் என்னால் என்னவென்று அவர் உணர்ந்திருக்கிறார் என்று தெரியவில்லை. விஜய்யின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் தெரிகிறது.
ஒரு அடி மாநாடு அடுத்த அடி கோட்டை என்று விஜய்யின் கற்பனை அதீதமாக இருக்கிறது. வாமன அவதாரத்தின் போது உலகை மூன்றடி உயரத்தில் அளந்ததாக சொல்வார்கள். அதுபோல கட்சி தொடங்கி மாநாடு என்ற ஒரு அடியை எடுத்து வைத்து அடுத்த அடியே கோட்டையில் வைப்போம் என்று சொல்வது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. அரசியலில் எதுவுமே படிப்படியாகத்தான் செல்ல முடியும்” இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.