விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் 100 அடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமானோர் நேற்று முன்தினம் மாலை முதலே மாநாட்டு திடலை நோக்கி வரத்தொடங்கினர்.
காலை 7 மணி முதலே மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த 3 பிரதான நுழைவு வாயில்கள் வழியாக மாநாட்டு திடலுக்குள் அனைவரும் அனுமதிக்கப் பட்டனர். விக்கிரவாண்டி, தென்னமாதேவி, ஓங்கூர், நங்கிலி கொண்டான், மொரட் டாண்டி, கெங்கராம்பாளையம் சுங்கச்சாவ டிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், காவல்துறையின் ‘ஜீரோ டிராபிக்’ என்ற அறிவுறுத்தலின்படி, முற்பகல் 11 மணிக்கு பின் அனைத்து வாகனங்களும் கட்டணம் வசூலிக்காமல் அனுப்பி வைக்கப்பட்டன.
போக்குவரத்து நெருக்கடி காரணமாக நேற்று பிற்பகல் 12 மணியளவில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டில் திருப்பி விடப்பட்டு, அந்த வாகனங்கள் திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம் வழியாக பயணிக்க அறிவுறுத் தப்பட்டது. பேருந்துகள் விழுப்புரம், செஞ்சி வழியாக திண்டிவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இலகு ரக வாகனங்கள் விக்கிரவாண்டி வழியாக அனுமதிக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி மாநாட்டுப் பகுதியில் சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப் பட்டிருந்தன. மாநாட்டுக்கு வந்த வாகனங்கள் சுமார் 5 கி.மீ தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
மாநாட்டு திடலைச் சுற்றியும், சென்னை – திருச்சி நெடுஞ்சாலையோரமும் நிர்வாகிகள், தொண்டர்கள் வருகையை உறுதி செய்யும் வகையில் ஆங்காங்கே கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்யும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு வருகை தந்தோரில் 35 வயதுக்கு கீழுள்ள இளைஞர்கள் அதிகளவில் இருந்தனர்.
பெரும்பாலும் அரசியல் கட்சி மாநாடுகளில் வெகு தொலைவில் இருந்து வாகனங்களில் ஆண்கள் அதிகளவில் வருவது வழக்கம். ஆனால் தவெக மாநாட்டில் இளம் பெண்கள் பலர் ஆர்வமாக வந்திருந்ததை காண முடிந்தது. இதனால் மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த இருக்கைகள் நிரம்பி வழிந்தன.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டைக் காண லட்சக்கணக்கான தொண்டர்கள் அங்கு திரண்டனர். தடுப்புகளைத் தாண்டியும், தடுப்புகளில் நின்றபடியும் மாநாட்டை காணும் தொண்டர்கள். குறிப்பாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள 13 கிராமங் களில் விஜய் ரசிகர்கள் கிராமத்துக்கு ஒரு பேருந்து வீதம் 13 பேருந்துகளில் மாநாட்டுக்கு வந்திருந்தனர்.
தேனி மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் பிரியாணி செய்து அன்னதானம் வழங்க பாத்திரம், காஸ் அடுப்பு, சிலிண்டருடன் வந்திருந்தனர். அவர்கள் மாநாட்டுக்கு சற்று தள்ளி ஒரு பகுதியில் சமையல் செய்து அன்னதானம் வழங்கினர். தர்மபுரியில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் 3 வேளையும் தாங்களே உணவு தயாரித்து சாப்பிட்டு, மாநாட்டு திடலுக்கு வருகை தந்தனர்.
இந்த மாநாட்டையொட்டி விக்கிர வாண்டி முதல் திண்டிவனம் கூட்டேரிப் பட்டு வரை ஏராளமான சாலையோரக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. மாநாட்டு திடலைச் சுற்றியும் தற்காலிகமாக உரு வான கடைகளில் தண்ணீர் பாட்டில், ஐஸ்கிரீம், சிப்ஸ், சிகரெட் விற்பனை களை கட்டியது.
விக்கிரவாண்டி, வி.சாலை, சித்தனி, கூட்டேரிப்பட்டு, திண்டிவனம் வரை உணவகங்களில் ஏராளமான தவெக தொண்டர்கள் திரண்டதால் மதியம் 2 மணிக்கே உணவு விற்றுத் தீர்ந்தது. பல இடங்களில் குடிநீர் பாட்டில் களுக்கான தனித்தனி கடைகள் விரிக்கப்பட்டு ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்தனர். கடும் வெயில் காரணமாக லட்சக்கணக்கான குடிநீர் பாட்டில்கள் விற்பனையானது.
வெயிலின் தாக்கம் காரணமாக சுமார் 20 பேர் வரை மயக்கமடைந்தனர். மாநாட்டுத் திடலில் பலர் இருக்கைகளை தலைக்குமேல் தூக்கியபடி நின்றிருந்தனர். வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், மாநாட்டு திடலில் இருந்த பவுன்சர்கள் தண்ணீர் பாட்டில்களை தொண்டர்களை நோக்கி வீசினர். திருமண மண்டபம் ஒன்றில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலங்களை பெறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாநாட்டு திடலினுள் தொண்டர்களின் வசதிக்காக 350 மொபைல் டாய்லெட், 22 ஆம்புலன்ஸ், 18 மருத்துவக் குழுவினர், 5 இடங்களில் பார்க்கிங் அமைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டு திடலுக்கு எதிரே இருந்த ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில், மாநாட்டுக்கு முன்னதாக குட்டி உறக்கம் போட்டு, பயணக் களைப்பில் தொண்டர்கள் ‘ரிலாக்ஸ்’ செய்த தையும் காண முடிந்தது.
இணைய தளவசதிக்காக செல்போன் டவர் அமைக்கப்பட்டு இருந்தாலும் பேசவும், அழைக்கவும் மட்டுமே சிக்னல் கிடைத்தது. இணையதள வசதி 2 கிலோ மீட்டருக்கு பிறகே கிடைத்தது. தொகுதிக்கு 10 வாட்ஸ் ஆப் குழு அமைத்துள்ள தவெக நிர்வாகிகள், மாநாட்டு நிகழ்வுகளின் படங்களை பொது அமைப்புகளுக்கு அனுப்பினாலும், சிக்னல் கிடைக்காமல் அது முடங்கியது. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் மருமகன் அபஜீத் மாநாட்டு விஐபி நுழைவாயில் வந்த போது பாஸ் இல்லாததால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் புஸ்ஸி ஆனந்தின் உத்தரவின் பேரில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மேடையில் பேசிய கட்சித் தலைவர் விஜய், “சாதாரண மனிதாக இருந்த விஜய், இளைஞனாக மாறினான், பின் நடிகனாக மாறினான், அதன் பின் வெற்றி பெற்ற மனிதனாக மாறினான். பொறுப்புள்ள மனிதனாக மாறினான். இப்போது பொறுப்புள்ள தொண்டனாக மாறியிருக்கிறான். அந்த பொறுப்புள்ள தொண்டன் நாளை.. அதை நான் சொல்லத் தேவையில்லை” என்று கூற, தொண்டர்கள் ‘சிஎம்.. சிஎம்’ என்று கூறி ஆரவாரம் செய்தனர்.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடியிருந்த நிலையில், மேடையின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் முண்டியடித்துக்க் கொண்டு விஜய்யின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். இதில் நெரிசல் ஏற்பட்டு, பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 10-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த நிலையில், அவர்களை பவுன்சர்கள், போலீஸார் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர்.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பொதுவாக மாநாடு நடைபெறும் பகுதியில் சச்சரவுகளைக் குறைக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் அடைக் கப்படுவதுண்டு. ஆனால் நேற்று விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் வழக்கம் போல இயங்க வைக்கப்பட்டிருந்தன. இம்மாநாட்டில் சுமார் 2.50 லட்சம் பேர் பங்கேற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கைகள், செயல் திட்டங்கள் என்னென்ன? – கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் விஜய் கொடியேற்ற, கட்சியின் கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார் அறிவித்துப் பேசியது: “மதம், சாதி, நிறம், இளம், மொழி பாலின் அடையாளம், பொருளாதாரம் என்ற தனி அடையாளங்களுக்குள் மனிதர்களை சுருக்காமல், அனைவரது சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி, பல்லோருக்கும் எல்லாம் என்ற சமநிலை சமூகத்தை உருவாக்குவோம். மக்களை இனம், மதம், மொழி, சாதி எனப் பாகுபடுத்தாமல், சம உரிமைகளை உத்தரவாதப்படுத்துவோம்.
ஆட்சி, அதிகாரம், சட்டம், நீதி, அரச இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை எதிர்த்து, மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவோம். ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சாதியை முழுவதும் ஒழிக்கும் வரை, அனைத்துப்பிரிவினருக்கும். அனைத்துத் துறைகளிலும் விகி தாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்குவோம். ஆண்களுக்கு நிகராக பெண்கள், 3-ம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் வழங்குவோம்.
அனைத்து மதத்தவர் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை சமமாகப் பாவிக்கும் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிப்போம். மாநில தன்னாட்சி உரிமையே, மக்களின் தலையாய உரிமை. எனவே, மாநில தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்பதே தவெகளின் தன்னாட்சி கொள்கையாகும். தாய்மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை தவெக பின்பற்றுகிறது.
தமிழே ஆட்சி மொழி வழக்காடு மொழி, வழிபாட்டு மொழியாக இருக்கும். தமிழ் வழியில் படித்தாவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு, தனியார் துறைகளில் அரசியல் தலையீடு இல்லாத, வஞ்சம் இல்லாத நிர்வாகம் கொண்டுவரப்படும்.
அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், தூய காற்று, குடிநீர் வழங்கப்படும் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். நீண்டாமையை ஒழிக்கும் வகையில் பிற்போக்குச் சித்தனைகளை நிராகரித்து, பழமைவாத பழக்க வழக்கங்களை நிராகரிப்போம். இயற்கையைப் பாதிக்காத வகையில் மாநில வளர்ச்சி இருக்கும். போதையில்லா தமிழகம், உற்பத்தி திறன் அதிகரிப்பு ஆகியவை கட்சியின் அடிப்படை கொள்கைகளாகும்” என்று அவர் பேசினார்.
தொடர்ந்து, கட்சியின் செயல் திட்டங்கள் குறித்து நிர்வாகி கேத்ரின் பாண்டியன் பேசும்போது, “அரசு நிர்வாகம் முற்போக்குச் சிந்தனை, பன்முகத்தன்மையுடன் இருக்கும். எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்படும். தலைமைச் செயலக கிளை மதுரையில் அமைக்கப்படும். சமத்துவம், சமூக நிதிக்கு எதிரான வர்ணாசிரமக் கோட்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைவருக்கும் சமமான இடப்பங்கீடு வழங்கப்படும். சாதி, மதம், மொழி வழி சிறுபான்மையினருக்கு பாது காப்பான குழல் உருவாக்கப் படும் பட்டியலின், பழங்குடி மக்களின் முன்னேற்றத்துடன், பிற்படுத் தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தப்படும்” என்றார்.