`விஜய்யுடன் நல்லவர்கள் இருந்திருந்தால் கரூர் சம்பவம் நடந்திருக்காது!' – முன்னாள் மேலாளர் செல்வகுமார்

Spread the love

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், சமீபத்தில் தி.மு.கவில் இணைந்தவருமான பி.டி.செல்வகுமார் நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.கவில் நான் அதிகாரத்திற்காகவோ, வெகுமதிக்காகவோ சேரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே தி.மு.கவுடன் கரம் சேர்ந்துள்ளோம். சுமார் 28 ஆண்டுகள் நடிகர் விஜய்யின் மேலாளராகப் பணியாற்றிய நான், ’புலி’ திரைப்படத்தினால், வருமான வரி சோதனை உள்ளிட்ட பல கஷ்டங்களை எதிர்கொண்டேன்.

விஜய்

எனக்கு உடல்நிலை சரியில்லாத காலங்களில்கூட அவரிடமிருந்து ஆதரவோ, ஒரு தொலைபேசி அழைப்போகூட வரவில்லை. இனி எதிர்காலத்தில் விஜய் என்னை கண்டுகொள்ள மாட்டார் என்பதை உணரத் தொடங்கின். விஜய்யிடமிருந்து வெளியே வந்த நான், “கலப்பை மக்கள் இயக்கம்” என்ற அமைப்பை உருவாக்கி பொதுமக்களுக்கு தொண்டாற்றினேன். 48 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினோம். அதற்கு எங்களுக்கு தமிழக அரசும் உதவியது.  விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது அவரது கட்சியில் முக்கியப் பதவியில் இருக்கிறார்களா என்றால் இல்லை.

ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் போன்ற இடையில் புகுந்தவர்கள்தான் இன்று அந்தக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், என்ன தியாகம் செய்தார் என, அவருக்கு கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது? அ.தி.மு.க என்னும் தேன் கூட்டில் தேனை உறிஞ்சிவிட்டு அது சக்கையான பிறகு த.வெ.கவிற்குள் நுழைந்து தனக்கு பலன்களை எதிர்பார்க்கிறார். நாஞ்சில் சம்பத், நிமிடத்திற்கு நிமிடம் கட்சி தாவக்கூடியவர் என்பது எல்லோருக்குமே தெரியும். நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட இன்னும் பக்குவப்பட வேண்டும்.

பி.டி.செல்வகுமார்

நேர்மையான மற்றும் திறமையான நிர்வாகிகளை அவருடன் வைத்துக் கொள்ள வேண்டும். விஜய்க்கான கட்சி கட்டமைப்பை உருவாக்கிய என்னையும், அவரது தந்தை சந்திரசேகரையும் கட்சியை விட்டு ஓரம் கட்டிவிட்டனர். த.வெ.கவில் தற்போது பணத்தை பெற்றுக் கொண்டு பதவிகளை வழங்குகிறார்கள். விஜய்யுடன் நல்லவர்கள் இருந்தால் கரூர் சம்பவம் நடந்திருக்காது. தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு மக்கள் பிரச்னைகளை எதிர்த்து களத்தில் இறங்கி போராட வேண்டும். தி.மு.க மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள்ளை தந்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க 224 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *