விஜய்யை பேச அனுமதிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கருத்து | Give Permission to Speak TVK Vijay: Selvaperunthagai Opinion

1377506
Spread the love

சென்னை: தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பிஹார் மாநிலத்துக்கு சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாட்னாவில் வாக்குத் திருட்டு பேரணியை ராகுல் காந்தி நடத்தி வந்தார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இருப்பதால் நான் பிஹார் மாநிலம் செல்கிறேன்.

கூட்டணியில் காங்கிரஸுக்கு கூடுதல் சீட்கள் வேண்டும் என்று கட்சியினர் தங்களுடைய ஆசையை சொல்கிறார்கள். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தாது. கட்சியினர் கருத்துகளை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவிப்பேன். ஆனால், முடிவு எடுப்பது காங்கிரஸ் தலைமையும், பொறுப்பாளர்களும் தான்.

தவெக-வுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி மறைமுகமாக எதுவும் பேசவில்லை. நாங்கள் எதற்கு மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்கு, என்ன தேவை இருக்கிறது ? எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் எந்த மாற்றமும் வராது.

தமிழகத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இல்லை. எங்களை விமர்சிக்க ஒன்றும் இல்லாததால், தவெக தலைவர் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை. விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவர் என்ன பேசுகிறார் என தெரியும். விஜய் கட்சிக்கு கூட்டம் நடத்த பிரச்சாரம் செய்ய அரசு அனுமதி தர மறுப்பதாக கூறுகிறீர்கள். காங்கிரஸ் கட்சிக்கு மட்டும், அரசு உடனே அனுமதி தருகிறதா?

ஒவ்வொரு போராட்டத்துக்கும் போராடிதான் அனுமதி வாங்க வேண்டியதாக இருக்கிறது. இந்த நான்கரை ஆண்டுகளில், போராட்டம் நடத்தியபோது, என்னை கைது செய்து உள்ளார்கள். அதற்காக நாங்கள் ‘காவல் துறை கைது செய்து விட்டது. அரசு நெருக்கடி தருகிறது’ என்று சொல்ல முடியுமா? அவர்கள் வேலையை, அவர்கள் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி எப்போதும், ஜனநாயகத்தின் பக்கம் தான் இருக்கும்” என்றார் செல்வப்பெருந்தகை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *