தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் தில்லி பயணத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விமர்சித்திருந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதை விமர்சித்து ஞாயிற்றுக்கிழமை விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், ”டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையையும் வாங்கியது. எனினும், இது நிரந்தரத் தடையல்ல என்பதால், எங்கே பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு, வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டார். அதற்கேற்றாற்போல அமைந்ததுதான் நீதி ஆயோக் கூட்டம்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் விடுவதும், ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்குவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், திடீரென இந்த வருடம் மட்டும் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இது, மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல. தன்னுடைய குடும்ப வாரிசு நிதியைக் காப்பாற்ற மட்டுமே என்பது சாமானிய மக்கள் நன்கு அறிந்ததே.” எனக் குறிப்பிட்டிருந்தார்.