“விஜய்யை விமர்சிப்பதால் என்னை திமுகவின் பி டீம் என்கிறார்கள்” – சீமான் ஆதங்கம் | They call me DMK B team because I criticize Vijay Seeman fear

1379446
Spread the love

சென்னை: “இப்போது நான் விஜய்யை விமர்சிப்பதால் என்னை திமுகவின் பி டீம் என சொல்கிறார்கள். திமுக எனக்கு காசு கொடுக்கிறது என சொல்கிறார்கள். நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன், யாருடைய சார்பும் எனக்கு தேவையில்லை” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னையில் இன்று பன்னாட்டு தமிழ் கிறிஸ்தவப் பேராயம் மற்றும் சமூக நீதிப் பேரவை நடத்திய நிகழ்ச்சியில் சீமான் பேசியது: “நான் புகழ்பெற்ற நடிகராக இருந்தால், அனைத்து ஊர்களிலும் ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களை தொண்டராக்கிக் கொண்டு, உடனடியாக கட்டமைப்பை உருவாக்கலாம். எந்தப் பின்புலம் இல்லாத நிலையில், அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்கு பெறும் ஒரே கட்சி, நாம் தமிழர்தான்.

தம்பி விஜய்யை நான் எதிர்க்கவில்லை. திமுக, காங்கிரஸ், பாஜகவைத்தான் எதிர்க்கிறோம். தம்பி விஜய்யிடம் கேள்விகளை எழுப்பினோம், அதனையே எதிர்ப்பதாக சொல்கிறார்கள். இப்போது விஜய்யை விமர்சிப்பதால் என்னை திமுகவின் பி டீம் என சொல்கிறார்கள். திமுக எனக்கு காசு கொடுக்கிறது என சொல்கிறார்கள். நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன், யாருடைய சார்பும் எனக்கு தேவையில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்ற திமுகவை விட பல்வேறு வாக்குச்சாவடிகளில் எங்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. இங்கு மிகப் பெரிய கட்சி நாம் தமிழர் தான். திமுக – தவெக இடையே போட்டி என சகோதரர் சொல்கிறார். விக்கிரவாண்டியிலும், ஈரோடு கிழக்கிலும் அவர்கள் போட்டியிடவில்லை. அங்கு உண்மையிலேயே நாம் தமிழருக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி இருந்தது.

இருவரும் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், நான் ரசிகர்களை சந்திக்கவில்லை, மக்களை சந்தித்தேன். என்னை பார்க்க வருபவர்கள் கொள்கை மணிகள். போட்டி என்பது கூட்டத்தை வைத்து கிடையாது. கருத்தியல் ரீதியாக இருக்கிறது. திராவிடமா, தமிழ் தேசியமா என்ற போட்டிதான்.

கூட்டணி வைப்பதாக இருந்தால் 15 ஆண்டுகளில் அவ்வளவு நெருக்கடி வந்தபோது வைத்திருக்க மாட்டேனா? எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடனும், இந்திய கட்சிகளுடனும் நாம் தமிழர் கட்சி தேர்தல் உடன்பாடு வைக்காது என்பதை கட்சி தொடங்கியபோதே அறிவித்தேன். இப்போதும் தனித்து நிற்போம். 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் தனித்து நிற்போம்.

காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இங்குள்ள பிறவி கோழைகள்தான் சீமானுக்கு வாக்களித்தால் பாஜக வந்துவிடும் என சொல்லி அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். நாம் பாஜகவின் பி டீம் என்றால் திமுக ஏ டீம். சிறுபான்மையினரின் பாதுகாப்பு திமுக என நம்பி, திமுகவை அவர்களே பாதுகாத்து வருகின்றனர்.

மக்கள் பிரச்சினைகளை பார்த்து படிப்பவர்கள் எப்படித் தலைவனாக இருக்க முடியும்?. பள்ளிக்கரணை ஏரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர்கள் மறைந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் மனிதர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்துவிட்டனர். திருடர்கள் கூடியிருக்கும் இடம் திராவிடம். திருடர்கள் முன்னேற்றம், அனைத்திந்திய திருடர்கள் முன்னேற்றம் என பரிணாமம் பெற்று வருகிறது” என்று சீமான் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *