விஜய்யின் “கில்லி’ ரீ ரிலிஸ், தமிழ் சினிமா ரீ ரிலிஸில் புதிய டிரெண்ட்டை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து பல ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களும் ரீ ரிலீஸ் வரிசைகட்ட ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் மறுவெளியீட்டுக்கு வரிசை ரெடியாகி வருகின்றன.

நூறாண்டு கால தமிழ் சினிமா எத்தனையோ டிரெண்ட்களை பார்த்திருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்த்திராத டிரெண்ட் ரீ ரிலீஸ் டிரெண்ட். ஒரு சமயத்துல திடீரென சிவாஜியின் ‘வசந்த மாளிகை’ வெளியாகும்.. உடனே போட்டியாக எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை திரையிடுவார்கள். இரண்டையுமே அதனதன் ரசிகர்கள் மட்டுமே பார்த்துவிட்டு கடந்திருப்பார்கள்.
பழைய படங்களை இந்த தலைமுறைகளும் அறிந்து கொள்ளும் விதமாக ரீரிலீஸ் படங்கள் இருந்து வருகின்றன. விஜய்யின் ‘தெறி’ அஜித்தின் ‘மங்காத்தா’, மாதவனின் ‘தம்பி’, சூர்யாவின் ‘மௌனம் பேசியதே’ என பல படங்கள் மறு வெளியீட்டிற்கு வரிசை கட்டுகின்றன.
இந்த பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜன நாயகன்’ வெளியாகாததால், ‘தெறி’ படத்தை பொங்கலுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், கார்த்தி, ஜீவா படங்களும் வெளியாகவே, குறைந்த அளவிலான திரைகளே கிடைக்கும் என்பதால் ‘தெறி’ ரீரிலீஸை ஒத்தி வைத்துள்ளனர்.
அஜித்தின் ‘மங்காத்தா’ ரீரிலீஸ் பேச்சு சில வருஷங்களாகவே இருந்து வந்தது. ஆனால் சரணின் ‘அட்டகாசம்’ வெளியானது. இப்போது ‘மங்காத்தா’வை இம்மாதம் திரைக்கு கொண்டு வருகின்றனர்.
சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா நடித்த ‘தம்பி’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. 20வது ஆண்டையொட்டி ‘தம்பி’யை ரீரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். ”தம்பி’யில் இயக்குநர் சீமான் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறேன். அதனால் தான் வேறொரு பரிமாணத்தை கொடுக்க முடிந்தது” என மாதவனின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.