விஜய் என்டிஏ கூட்டணிக்கு வர வாய்ப்பு: பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் தகவல் | BJP says tvk leader Vijay is likely to join the NDA alliance

Spread the love

கும்பகோணம்: “என்டிஏ கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வருவாரா மாட்டாரா என்று இப்போது கூற முடியாது. போகப்போக விஜய், என்டிஏ கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது” என பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம்-சென்னை நான்கு வழிச்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாஜக அனைத்து பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் சங்கமம் 2025 மாநாடு நடைபெறுவதையொட்டி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநிலப் பிரிவு பொறுப்பாளர் கே.டி.ராகவன் தலைமை வகித்தார். இணை அமைப்பாளர் எம்,நாச்சியப்பன் முன்னிலை வகித்தார். பொருளாதார பிரிவு மாநிலத் துணை தலைவர் கார்த்திகேயன், தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் தங்க, கென்னடி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, பந்தக்கால் நட்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, இணை அமைப்பாளர் எம்,நாச்சியப்பன் செய்தியாளர்களிடம் கூறியது: கும்பகோணத்தில் வரும் 29-ம் தேதி மாலை 3 அணி அளவில் அனைத்து பிரிவு அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் சங்கமம் 2025 நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை வகிக்கின்றார். மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், முரளி முகாலே, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பொறுப்பாளர் பைஜே பாண்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தேர்தலுக்கு முன் இந்த மாநாட்டை நடத்துகின்றோம். மேலும் இதே போல் ஒரு நிகழ்ச்சி வரும் பிப்ரவரியில் நடத்த உள்ளோம். மொத்தம் உள்ள 30 பிரிவுகளில் உள்ள சுமார் 22 ஆயிரம் நிர்வாகிகள் உள்பட 25 ஆயிரம் பேர பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சி பாஜக அமைப்பு நிகழ்ச்சி என்பதால், கூட்டணி கட்சியினர் பங்கேற்கமாட்டார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து வருவதற்கு கும்பகோணம் மையப்பகுதியாக இருப்பதால், இங்கு இந்த நிகழ்ச்சியை வைத்துள்ளோம். அண்மைக்காலமாக திமுகவிற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

நயினார் நாகேந்திரன் கூட்டத்திற்கு பொதுமக்களே எழுச்சியுடன் பங்கேற்கிறார்கள். அதனால் வரும் 2026- தேர்தலில் தமிழகத்தில் என்டிஏ கூட்டணிக்கு சிறப்பான வாய்ப்பு உள்ளது. என்டிஏ கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வருவாரா மாட்டாரா என்று இப்போது கூற முடியாது. போகப் போக விஜய், என்டிஏ கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *