சென்னை: விஜய் குறித்து அண்ணாமலை பேசியது விளம்பர உத்தி என்று தவெக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் குறித்து திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சார விளம்பர பேச்சுகள் முற்றிலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கருத்தாகும்.
மதச்சார்பற்ற சமூக நீதி என்ற கொள்கையை முன்வைத்து தவெக பயணிக்கிறது. திராவிடம், தமிழ் தேசியம் என எந்த அடையாளத்துக்கு உள்ளாகவும் சுருங்க விரும்பவில்லை என கொள்கை பிரகடன மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் அறிவித்த பிறகும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புரிதல் இன்றி பேசியுள்ளார். இது விளம்பர உத்தியாக, நீண்ட நாள் கழித்து தமிழகம் திரும்பியுள்ள அவருக்கு ஒரு வெளிச்சம் தேடும் முயற்சியாகவே பார்க்கிறோம். தமிழக மக்கள் எல்லா வகை உணவும் உண்பார்களே தவிர, மதவாதம் எனும் நஞ்சினை ஒருகாலமும் உண்ண மாட்டார்கள்.
மத்தியில் பாஜக அதிகாரத்தில் இல்லையென்றால் தமிழ்நாட்டில் இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் சென்றுவிடுவார்கள். பன்முக தன்மை கொண்ட தேசத்தில், குறிப்பாக அதை பெரிதும் போற்றும் தமிழக மக்கள் ஒற்றை உணவுபோல ‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே தேர்வு’ என்பது போன்ற திட்டமிடப்பட்ட பன்முக சிதைவுகளை ஒருகாலமும் அனுமதிக்க மாட்டார்கள். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெகவை தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவைத்து, அறுசுவை உணவுடன் எங்கள் கொள்கை எதிரியான பாஜகவுக்கும், அரசியல் எதிரியான திமுகவுக்கும் விருந்து வைப்பார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
என்ன பேசினார் அண்ணாமலை? – முன்னதாக, “திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும்போதே, அரசியலில் கால் பதித்த நடிகர் விஜய்யை வரவேற்கிறோம். அவர் முழுநேர அரசியலுக்கு வந்து, அவரது கருத்துகளை முன்வைக்கும்போது, பாஜகவும் தனது கருத்துக்களை மக்கள் முன்பு வைக்கும். திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தைதான் விஜய்யும் பேசுகிறார். அவரது கொள்கை கிட்டத்தட்ட திராவிட கட்சிகளோடு தான் ஒத்துப்போகிறது.
புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கண்டு பாஜக எப்போது பயப்படாது. நடிப்பு என்பது வேறு. அரசியல் களம் என்பது வேறு. அக்.28-ம் தேதிக்கு பிறகு நடிகர் விஜய் எத்தனை முறை வெளியே வந்திருக்கிறார். அவரை கேள்விக் கேட்க வேண்டிய இடத்தில் நாங்கள் கேள்வி கேட்போம். இன்றைய சூழலில் திராவிட கட்சிகளின் வாக்குகள் மூன்றாக பிரிந்திருக்கிறது. பாஜகவின் வாக்கு அதிகரித்து வருகிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.