“விஜய் கூறியது போல் திமுக அழுத்தம் தரவில்லை” – திருமாவளவன் விளக்கம்  | thirumavalavan refused vijay remark said there is no pressure from dmk

1342393.jpg
Spread the love

திருச்சி: “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் காரணம் என விஜய் கூறியிருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எந்த அழுத்தமும் எனக்கு திமுக தரப்பிலிருந்து கொடுக்கப்படவில்லை. அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் அளவுக்கு நானோ அல்லது விசிகவோ பலவீனமாக இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் நினைவு நாளில், அம்பேத்கரின் நூலை வெளியிட்டிருப்பதும், அவரைப் பற்றி பேசியிருப்பதும் பெருமை அளிக்கிறது. இன்றைக்கு பொது நீரோட்டத்தில் அம்பேத்கர் வெகுவாக பேசப்படுகிறார். அந்த வரிசையில் விஜய்யும் இணைந்திருப்பது வரவேற்புக்குரியது.

அந்த நிகழ்வில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என அவர் கூறியிருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுப்படுத்தியிருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் அளவுக்கு நானோ அல்லது விசிகவோ பலவீனமாக இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த நிகழ்வின் நான் பங்கேற்காமல் போனதற்கு விஜய் காரணமில்லை.

அவருக்கும் எங்களுக்கும் எந்த விதமான சிக்கலும் இல்லை. ஆனால், நாங்கள் பங்கேற்க போகிறோம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, அதற்கு அரசியல் சாயம் பூச சிலர் முயற்சித்தனர். அதை ஆராய வேண்டிய தேவை உள்ளது. அவர்கள் எந்த பின்னணியில் இயங்குகிறார்கள் என்பது முக்கியமானது. ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் தேர்தல் அரசியல் களத்தில் நாங்கள் இருக்கிறோம். ஓரளவுக்கு எங்களாலும் யூகிக்க முடியும்.

அந்த வகையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியலாக்கிவிடுவார்கள். அப்படி அரசியலாக்குவதை நான் விரும்பவில்லை. தமிழகத்தில் எங்கள் கூட்டணியை குறிவைத்து காய் நகர்த்தும் அரசியல் நடக்கிறது. அவர்களுக்கு வாய்ப்பு தர நான் விரும்பவில்லை. இது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. நல்லெண்ணத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு. விசிக அங்கம் வகிக்கும் கூட்டணி சிதையாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் எடுத்த முடிவு. இதில் திமுக எந்த வகையிலும் தலையிடவில்லை.

‘வாய்ஸ் ஆஃப் காமன்’ என்ற நிறுவனத்தின் அடிப்படையில் தான் ஆதவ் அர்ஜுனா புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றார். அவர் கூறியிருக்கும் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல. அது அவரின் தனிப்பட்ட கருத்து சுதந்திரம்” என்றார்.

முன்னதாக சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், “அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. அவரின் மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்” என்றார். | > அதன் விவரம்: “கூட்டணியில் திருமாவளவனுக்கு நெருக்கடி!” – தவெக தலைவர் விஜய் ஆவேச பேச்சு

அதேபோல புத்தக வெளியீட்டு விழாவில் விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “ “காலச் சூழல் காரணமாக திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது. ஒரு பட்டியலினத்தவர் முதல்வராக வரவேண்டும் எனும்போது அதற்காக முதல் குரலாக ஒலித்த குரல் விஜய்யின் குரல். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை உரக்க சொல்வோம். 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு வந்துள்ளார் விஜய். ஆனால், இங்கே சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர்” என்றார். | > அதன் விவரம்: “2026-ல் மன்னராட்சி ஒழிக்கப்படும்…” – விஜய் மேடையில் விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேச்சு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *