“விஜய் கூறியது போல் திருமாவளவனுக்கு அழுத்தம்…” – அதிமுக துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி கருத்து | AIADMK Deputy General Secretary K.P. Munusamy comments over vck issue

1342491.jpg
Spread the love

கிருஷ்ணகிரி: “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது விஜய் கூறியது போல் அழுத்தம் இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம்” என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில், கிழக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், “அம்பேத்கர் நிகழ்ச்சியில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டிருக்க வேண்டும். அவர் கலந்துகொள்ள முடியாத ஒரு சூழல் வருகிறது என்றால், தவெக தலைவர் விஜய் கூறியது போல், அழுத்தம் இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம். வாரிசு அடிப்படையில் தான் மு.க ஸ்டாலின் முதல்வராகி உள்ளார்.

தனிப்பட்ட முறையில் உழைத்து அந்த இடத்துக்கு வரவில்லை. கருணாநிதியின் மகன் என்ற காரணத்தால் தான் இன்று கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் உள்ளார். அதைத் தொடர்ந்து மன்னர் ஆட்சி போல், ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், அந்த கட்சிக்கு தலைமை ஏற்கவும், ஆட்சி தொடர்ந்தால் முதல்வர் ஆக்கவும், மகனை துணை முதல்வர் ஆக்கியுள்ளார். வாரிசு முறையில் இருக்கும் இந்த ஆட்சியை நீண்ட காலமாக அதிமுக எதிர்த்து வருகிறது. அதைத்தான் தற்போது விசிக-வின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியின் செயல்பாடுகளை அறிக்கையாக வெளியிட்டால், அந்த அறிக்கையை மதிப்பதில்லை என மு.க.ஸ்டாலின் பதில் சொல்கிறார். அனுபவமிக்க மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ் கருத்து கூறினால், அவருக்கு வேறு வேலை இல்லை என விமர்சனம் செய்கிறார். அந்த ஆணவ போக்கில் தான் 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அவர் சொல்கிறார். இந்த ஆணவத்துக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடியை தமிழக மக்கள் வழங்குவார்கள்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்களை ஏமாற்ற ஊத்தங்கரைக்கு இரவு 8 மணிக்கு வந்து, இரண்டு பேருக்கு நலத்திட்டம் கொடுத்துவிட்டு, யாரிடமும் பேசாமல், மக்களை சந்திக்காமல் செல்கிறார். இந்த செயல் தவெக தலைவர் விஜய் கூறிய, போட்டோ சூட் கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் உடன்படுகிறார். அதே சமயம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, மக்களை சந்தித்து அறுதல் கூறியதுடன், ஊடகங்கள் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்.

மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்ற போது, தான் மக்களின் துயரமும், துன்பமும் தெரியும். தோராயமாக ரூ.2 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் பாதிப்பை கணித்து முதல் தவணை, இரண்டாம் தவணை என பிரித்து நிவாரணம் கேட்டோம். முதல்வர் ஸ்டாலினால், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்பதை உடனடியாக கணிக்க முடியவில்லை. தற்போது ரூ.944.18 கோடி மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொடுத்துள்ளது.

ஆட்சியாளர்கள் தன்னுடன் இருப்பவர்களுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கின்றனர். மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்யும் போது, உரியவர்கள் இடத்தில் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. பயந்து ஒதுங்கி கொள்கின்றனர். புதுச்சேரியில் ரூ.5000 நிவாரணம் கொடுக்கிறார்கள். இங்கு ரூ.2 ஆயிரம் தான் கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது, இயற்கை பேரிடரின் போது இறந்தால் ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என தற்போதைய முதல்வர் கூறினார்.

இப்போது, எவ்வளவு கொடுத்துள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு பேசுகிறார் முதல்வர். ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார், தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி குறித்து விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *