“விஜய் ஜீரோ மாதிரி… எப்படி அந்த கார்-னு ஒரு கேள்வி இருக்கு" – தமிழிசை சௌந்தராஜன்

Spread the love

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பா.ஜ.க மாநில துணை தலைவர்கள் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசிய கொடி ஏற்றிவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு கொண்டிருப்பதை போல மாய தோற்றத்தை முதலமைச்சர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு எனது வன்மையான கண்டனம். தமிழர்களுக்கு நல்லது நடக்கும்போது முதல்வர் வாழ்த்துவதுகூட கிடையாது.

சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவரானபோதும், தமிழ்நாட்டின் 10 மாவட்ட பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டபோதும் முதல்வராக வாழ்த்தவில்லை. அதனால் அவரது சுயநல நோக்கத்தை, அவரின் ஈகோ அரசியலையும் தமிழகம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தம்பி விஜய்க்கு அனுபவம் இன்னும் போதாது என நினைக்கிறேன். அவர் தனித்து விடப்பட்டதால் அப்படி பேசுகிறாரா என்று எனக்கு தெரியவில்லை. உச்சத்தில் இருந்து வந்திருக்கிறார் என்று சொல்கிறார். 30 வருடம் நடித்து, பெயர், புகழ், பணம் எல்லாம் சேர்த்துவிட்டுதானே வந்திருக்கிறார். ஏதோ தியாகம் செய்வதாகப் பேசிக்கொண்டிருக்கிறார்.

எனவே, இந்த தேர்தலில் உண்மையிலேயே போட்டி, திமுக கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான். தனி சக்தியாக வருவோம் என்கிறார். அவருடன் வருவதற்கு யாரும் தயாராக இல்லை. ஒரு ரூபாய் கூட ஊழல் கரைபடியாதவர் என்கிறார். ஆனால், படத்தின் மூலம் ரூ்.15 கோடி மறைத்த விவகாரம், யார் அந்த சார் என்பது போல எப்படி அந்த கார்? போன்ற கேள்விகள் இருக்கிறது. நம் வீட்டில் இருக்கும் சிறுவர்கள் நான் அப்படி செய்துவிடுவேன் இப்படி செய்துவிடுவேன் எனப் பேசுவதுபோலதான் அவரின் பேச்சைப் பார்க்கிறேன்.

தவெக விஜய்
தவெக விஜய்

விஜய் ஒரு ஜீரோ மாதிரி, தனியாக இருந்தால் மதிப்பு கிடையாது. அதே ஜீரோ இன்னொன்றுடன் சேர்ந்தால் மதிப்பு அதிகம். திமுக கூட்டணிலேயே சிக்கல் இருக்கிறது. முதல்வரின் பேச்சில் பதற்றம் இருக்கிறது. என்.டி.ஏ கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.

திரைப்படத்திலிருந்து வந்து முதலமைச்சராக வருவது மிக மிக சிரமமான காரியம். அதனால், விஜய் தொண்டர்களின் உழைப்பையும், ரசிகர்களின் உழைப்பையும், அவர்களின் நம்பிக்கையும் வீணாக்கிவிடக்கூடாது. எந்த கூட்டணி வெற்றி பெறுகிறதோ அந்த கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசியல் செய்யலாம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *