திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெகவினர், கரூரில் உயிரிழந்த 41 பேரின் ஆத்மா சாந்தியடைய 16-ம் நாள் காரியம் செய்தனர். இதையொட்டி, துறையூர் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் முன்பு புரோகிதர் மூலம் வேத மந்திரங்களுடன் பூஜைகள் செய்யப்பட்டன.
யாகம் வளர்க்கப்பட்டு, அதில் வைத்திருந்த தர்ப்பை புற்கள், கல் ஆகியன கோயில் குளத்தில் விடப்பட்டன. மேலும், பிதுர்லோகத்தில் இருப்பவர்களுக்கு கவளப்பிண்டம் வைத்து பூஜிக்கப்பட்டு, அவை கோயில் குளத்தில் கரைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், தவெக திருச்சி வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் மதன், துறையூர் தொகுதி பொறுப்பாளர்கள் கவியரசன், சதா, துறையூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சுதாகர், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தர்மா உட்பட பலர் பங்கேற்றனர்.