தவெக தலைவர் விஜய் பேசியுள்ள கருத்தில் உடன்பாடு இல்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் நினைவு நாளான வியாழக்கிழமை(டிச.6) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் பேசுகையில், ”விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட்டணிக் கட்சிகளால் அவருக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், அவருடைய மனது முழுக்க நம்முடன்தான் இருக்கும்.
கூட்டணிக் கட்சி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்போடு 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.
நீங்கள் உங்களோட சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணிக் கட்சி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள்.
சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடப்பதாக மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். சம்பிரதாயத்திற்காக மழை நீரில் நின்று போட்டோ எடுக்க முடியாது.. சம்பிரதாயதிற்காக டுவிட், சம்பிரதாயதிற்காக அறிக்கை, சம்பிரதாயத்திற்காக எடுக்கும் புகைப்படங்களில் எனக்கு உடன்பாடில்லை” என்றார் விஜய்.
விஜய் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள திருமாவளவன், “அம்பேத்கர் விழாவில் விஜய் பேசியதில் உடன்பாடில்லை. திமுக கூட்டணி அழுத்தத்தால் இந்த விழாவில் தான் பங்கேற்கவில்லை என விஜய் பேசியதில் உடன்பாடில்லை” என்று தெரிவித்தார்.