தவெக தலைவர் விஜய் பேசியுள்ள கருத்தில் உடன்பாடு இல்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் நினைவு நாளான வியாழக்கிழமை(டிச.6) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் பேசுகையில், ”விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட்டணிக் கட்சிகளால் அவருக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், அவருடைய மனது முழுக்க நம்முடன்தான் இருக்கும்.
கூட்டணிக் கட்சி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்போடு 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.
நீங்கள் உங்களோட சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணிக் கட்சி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள்.
சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடப்பதாக மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். சம்பிரதாயத்திற்காக மழை நீரில் நின்று போட்டோ எடுக்க முடியாது.. சம்பிரதாயதிற்காக டுவிட், சம்பிரதாயதிற்காக அறிக்கை, சம்பிரதாயத்திற்காக எடுக்கும் புகைப்படங்களில் எனக்கு உடன்பாடில்லை” என்றார் விஜய்.
விஜய் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள திருமாவளவன், “அம்பேத்கர் விழாவில் விஜய் பேசியதில் உடன்பாடில்லை. திமுக கூட்டணி அழுத்தத்தால் இந்த விழாவில் தான் பங்கேற்கவில்லை என விஜய் பேசியதில் உடன்பாடில்லை” என்று தெரிவித்தார்.
அம்பேத்கர் விழாவில் தான் பங்கேற்க முடியாமல் போனதற்கு திமுகவோ அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தந்த அழுத்தமோ காரணம் என்ற விஜய்யின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி எந்த அழுத்தமும் இல்லை. அந்த கருத்தில் உடன்பாடில்லை.
அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் அளவுக்கு நானோ அல்லது விசிகவோ பலவீனமாக இல்லை. இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்காமல் போனதற்கு விஜய் காரணமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஜனநாயகத்தின் ஆணி வேர் நியாயமான தேர்தல்: விஜய்!
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “விஜய், அம்பேத்கர் தொடர்பான நூலை வெளியிட்டிருப்பதும் அவர் குறித்து பேசியிருப்பதும் பெருமையளிக்கிறது.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கொடுத்த அழுத்தத்தினால்தான் நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை என விஜய் பேசி இருக்கும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் எனக்கு இல்லை.
அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய நிலையில் நானோ விடுதலை சிறுத்தைகள் கட்சியோ இல்லை.
இந்த நிகழ்வில் நான் கலந்து கொள்ளாமல் போனதற்கு விஜய் காரணம் இல்லை. அவருக்கும் எங்களுக்கும் எந்தவித சிக்கலும் இல்லை.
நூல் வெளியீட்டு நிகழ்ச்சி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே நானும் விஜய்யும் ஒரே மேடையில் இருக்கப் போகிறோம் என சிலர் அரசியல் சாயம் பூச முயற்சித்தார்கள். அவர்கள் எந்த பின்புலத்தோடு அதை செய்தார்கள் என்பதை ஆராய வேண்டும்.
கால் நூற்றாண்டிற்கும் மேல் அரசியலில் இருக்கும் எங்களுக்கு இது போன்ற விவகாரங்களை யூகிக்க முடியும். நூல் வெளியீட்டு விழாவை அரசியலாக்கி விடுவார்கள் என்பதை நான் விரும்பவில்லை. அதனால்தான், நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என ஏற்கனவே கூறிவிட்டேன்.
தமிழகத்தில் எங்கள் கூட்டணியை குறிவைத்து காய் நகர்த்தும் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஒரு வாய்ப்பை நான் தர விரும்பவில்லை.
எனவே அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வில்லை என ஏற்கனவே அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து நான் எடுத்த முடிவு என்னுடைய சுதந்திரமான முடிவு, நல்லெண்ணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு.
விடுதலை சிறுத்தைகள் அங்கம் வைக்கும் கூட்டணியின் நோக்கம் சிதையாமல் இருக்க வேண்டும் என தொலைநோக்கு பார்வையோடு நான் எடுத்த முடிவு.
எனக்கு எந்தவித அழுத்தமும் இல்லை. திமுக இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.
ஆதவ் அர்ஜுன், விசிக சார்பில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவர் கூறி இருக்கும் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு.
கட்சிக்குள் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் ஒவ்வொருவருக்கும் கருத்து கூற சுதந்திரம் உள்ளது.
நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்கிற வருத்தமும் ஆதங்கமும் ஆதவ் அர்ஜுனுக்கு உள்ளது. தன்னை ஆற்றிப்படுத்திக் கொள்ளும் வகையில் என்னுடைய மனசாட்சி அந்த நிகழ்ச்சியில் உள்ளது என அவர் பேசியுள்ளார்.
த.வெ.க – விசிக கூட்டணி அமைப்பது குறித்தான செயல்திட்டம் வகுக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனனுக்கு எண்ணம் இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட எண்ணம். நாங்கள் தற்பொழுது இருக்கும் கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். இந்த கூட்டணியில்தான் தொடர்வோம் என ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன், தற்பொழுதும் கூறுகிறேன்.
திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆதவ் அர்ஜுன் பேசி வருவது உண்மை தான். இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். அவர் உரிய விளக்கம் அளிப்பார் என நம்புகிறேன். இல்லையென்றால் கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
200-க்கும் அதிகமான தொகுதியில் திமுக வெற்றி பெறும் என நினைப்பது, இறுமாப்பு என விஜய் பேசியிருப்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
உலகம் முழுவதும் மன்னராட்சி ஒழிந்து விட்டது. தமிழகத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் நடந்து வருகிறது.
மன்னராட்சி குறித்து மேடைக்காக ஆதவ் அர்ஜுன் பேசிய கருத்தை பொருட்படுத்த தேவையில்லை” என்றார்.