தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.
அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். அதனடிப்படையில் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்திருக்கின்றனர்.
அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாகச் சென்று மக்களைச் சந்திக்க இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேபோல அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெறும் இந்த ரோடு ஷோவில், உப்பளம் சோனாம்பாளையம் பகுதியில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அது தொடர்பாக புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகம், புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கு மனு ஒன்றை அளித்திருக்கிறது. அந்த மனுவில், `புதுச்சேரியில் நடிகர் விஜய்யின் ரோடு ஷோ நடத்துவதற்கு த.வெ.க-வினர் அனுமதி கேட்டிருக்கின்றனர்.
கரூரில் விஜய் நடத்திய ரோடு ஷோவில் 41 பேர் உயிரிழந்தனர். அதைக் கவனத்தில் கொண்டு புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளிக்கக் கூடாது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதையும் மீறி அனுமதி கொடுத்தால் போராட்டம் நடத்துவோம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.