கரூர்: கரூரில் கடந்த செப். 27-ம் தேதி தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு வங்கி கணக்கில் தவெக சார்பில் நிவாரணமாக தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேற்று மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் குடும்பத்துக்கு விஜய் வழங்கிய ரூ.20 லட்சத்தை, நேற்று திருப்பி அனுப்பியதாக ரமேஷின் மனைவி சங்கவி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் வந்து ஆறுதல் கூறுவதாக வீடியோ காலில் பேசும்போது விஜய் கூறியிருந்தார்.
ஆனால், இங்கு வராமல், மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்தித்துள்ளார். இதனால், நான் எனது வங்கிக் கணக்குக்கு அனுப்பிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிவிட்டேன்’’ என்றார். அதேநேரம், மாமல்லபுரத்துக்கு சங்கவி செல்லாத நிலையில், ரமேஷின் தங்கை பூபதி மற்றும் உறவினர்கள் அர்ஜுனன், பாலு ஆகியோர் மாமல்லபுரம் சென்றிருந்தனர்.