‘விஜய் வீட்டில் முடங்கிக் கிடப்பது சரியல்ல; கைதுக்கு பயந்தால் அரசியல் செய்ய முடியாது’ – கிருஷ்ணசாமி | It is not right for Vijay to remain paralyzed at home he cannot do politics if he is afraid of arrest says Krishnasamy

1378667
Spread the love

சென்னை: விஜய் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது சரியானது கிடையாது. விஜய்யும் இந்நேரம் வெளியே வந்து இருக்க வேண்டும். காவல்துறை கைதுக்கெல்லாம் பயந்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொதுவாக ஒருநபர் ஆணையங்கள் ஆளும் கட்சியின் வழிகாட்டுதலின் படிதான் அறிக்கை கொடுக்கும். கரூரில் 41 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய சோக சம்பவம். எனவே இதற்கு ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு போன்றவை உண்மையை வெளிக்கொண்டு வர உதவாது. அஸ்ரா கார்க் நேர்மையானவராக இருந்தாலும், அவர் தமிழக அரசுக்கு எதிராகவோ அல்லது காவல்துறைக்கு எதிராகவோ அறிக்கை கொடுக்க முடியும் என நான் நம்பவில்லை.

கரூர் சம்பவத்துக்கு நீதிபதிகளே நான்கு பேர் சேர்ந்து விசாரிக்கலாம். எனவே நடுநிலையோடு இதனை விசாரிக்க வேண்டும். இதன் மூலமாக விஜய்யை கார்னர் செய்ய வேண்டும், அவரை ஒடுக்க வேண்டும், அவரை தேர்தல் பாதைக்கு வரவிடாமல் பலவீனப்படுத்த வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள்.

விஜய்யும் இந்நேரம் வெளியே வந்து இருக்க வேண்டும். காவல்துறை கைதுக்கெல்லாம் பயந்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது. கைது செய்தால் என்ன, 15 நாள், ஒரு மாதம் சிறையில் வைக்கப்போகிறார்கள். அதனை எதிர்கொள்ளவேண்டும். தவெகவினர் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருப்பது பொதுவாழ்வுக்கு நல்லது கிடையாது. தைரியத்தோடு வெளியே வந்தால்தான் அரசியல் களத்தில் நிற்க முடியும். இடைவெளி விழுந்துவிட்டால் அதனை மீண்டும் நிரப்ப முடியாது.

அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால், பூட்டிய கதவுகளை திறந்து தவெகவினர் வெளியே வர வேண்டும். கரூர் துயரம் நடந்தவுடன் ஏன் உடனே அங்கிருந்து வெளியேறினார் என்பதற்கு விஜய் விளக்கமளிக்க வேண்டும். அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது சரியானது கிடையாது.

கரூர் சம்பவத்தில் எந்த இடத்தில் என்ன தவறு எனக் கண்டறிய வேண்டும். அப்போதுதான் அடுத்து இதுபோல நிகழ்வு நடக்காது. இதில் மேம்போக்காக விஜய் மீது தவறு, காவல்துறை மீது தவறு என மேம்போக்காக சொல்ல முடியாது” என அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *