விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விதர்பாவை வீழ்த்தி கர்நாடகம் சாம்பியன் பட்டம் வென்றது.
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வதோதராவில் இன்று (ஜனவரி 18) நடைபெற்றது. விதர்பா மற்றும் கர்நாடகத்துக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, கர்நாடகம் முதலில் விளையாடியது.
சதம் விளாசிய சமரன் ரவிச்சந்திரன்
முதலில் விளையாடிய கர்நாடகம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரன் ரவிச்சந்திரன் சதம் விளாசி அசத்தினார். அவர் 92 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய அபினவ் மனோகர் 42 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். கிருஷ்ணன் ஸ்ரீஜித் 78 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிக்க: அணியில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!
விதர்பா தரப்பில் தர்ஷன் நல்கண்டே மற்றும் நச்சிகட் பூட்டே தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். யஷ் தாக்குர் மற்றும் யஷ் கடம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
கர்நாடகம் சாம்பியன்
349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விதர்பா களமிறங்கியது. விதர்பா அணி 48.2 ஓவர்களின் முடிவில் 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய துருவ் ஷோரே சதம் விளாசி அசத்தினார். அவர் 111 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, ஹர்ஷ் துபே அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவர் அதிரடியாக விளையாடிய போதிலும், விதர்பா வெற்றி பெற முடியவில்லை. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய கேப்டன் கருண் நாயர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க: “அருமையான அணி…” பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை பிசிசிஐ-க்கு பாராட்டு!
கர்நாடகம் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, வாசுகி கௌசிக் மற்றும் அபிலாஷ் ஷெட்டி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹார்திக் ராஜ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இறுதியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தி கர்நாடகம் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சமரன் ரவிச்சந்திரன் ஆட்ட நாயகனாகவும், கருண் நாயர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.