முதல் மூன்று புள்ளிகள் எடுப்பவன்தான் வெற்றியாளர்; அவனுக்குத்தான் ரப்பர் சொந்தம். தோற்றவர் எந்த சூழலிலும் அதைக் ‘சொந்தக்கொள்ளக் கூடாது’ — இருவரின் அம்மாக்களும் போட்டி தொடங்கும் முன்பே சத்தியம் செய்து வைத்திருந்தனர்.
இன்னும் ஒரு விடுகதைக்கு பதில் சொன்னாலே ரப்பர் தனது வசமாகிவிடும் என்ற எண்ணத்தில் குமார் குதூகலித்துக்கொண்டிருந்தான்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றாவது விடுகதைக்கு சரியான பதிலை சொன்னான் சுரேஷ். வகுப்பறையில் ஒரே ஆரவாரம் — “குமாரு!” “சுரேஷு!” என்று இரண்டு அணிகளாகப் பிளந்து ஆரவாரம்.
சுரேஷ் சொன்ன பதில் குமாரை எவ்வளவு கஷ்டப்படுத்தியதோ தெரியாது… ஆனால் ஆசிரியரை மிகுந்த கஷ்டத்தில் ஆழ்த்தியது உறுதி. ஏனென்றால், ஆசிரியரின் விடுகதைக் கையிருப்பு முடிந்துவிட்டது.
நான்காவது விடுகதையை எப்படியோ யோசித்து கேட்டார். அதற்கும் சரியான பதிலை சுரேஷ் கூறிவிட்டான். வகுப்பறையில் மீண்டும் அலப்பறை. குமாரின் நிலைமை பரிதாபம்; ஆனால் ஆசிரியரின் நிலையை ஒப்பிட்டால் பரவாயில்லை.
அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் தவித்த ஆசிரியை. மாணவர்களிடம் கேட்டு மானம் போய்விட வேண்டாமென்று நினைத்தார்.
இந்த வழக்கில் வெள்ளப் போவது தர்மமா… அதர்மமா… நல்ல சக்தியா… தீய சக்தியா… சோட்டா பீம்மா… அல்லது கில்மாடாவா… என்று மாணவர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
நீண்ட சிந்தனையிலும் பதில் கிடைக்காத ஆசிரியை, விரக்தியில் — “இப்போ கேட்கப் போற கேள்விக்கு இருவரும் பதில் சொல்லக்கூடாது” என்று முடிவு செய்து, தானே ஒன்றை உருவாக்கி கேட்டார்:
“கண்மூடியும் நடக்குமாம்…
காற்றிலே பறக்குமாம்…
ஆற்றையும் கடக்குமாம்…
அது என்ன?”
இருவருக்கும் பதில் தெரியாமல் நீண்ட நேரம் திணறினர். ஆதரவாளர்களின் முகங்கள் கசந்தன.
இதையே பயன்படுத்தி இந்த வழக்கை கிடப்பில் போடலாம் என ஆசிரியை நினைக்கத் தொடங்கினார்.
அந்த நேரத்தில்—
“மிஸ்… எனக்கு பதில் தெரியுமே மிஸ்!” என்று கத்தினான் சுரேஷ்.
ஆசிரியை உள்ளுக்குள் திணறினாலும் வெளியில் காட்டவில்லை. “சரி… சொல்,” என்றார்.
சுரேஷ் உற்சாகமாக:
“இதுக்கு பதிலே எங்க அப்பா மிஸ்!”
வகுப்பு வெடித்தது.
ஆசிரியருக்கோ கோபம் எழுந்தது.
“டேய் சுரேஷ்! எவ்வளவு திமிரு இருந்தா? இவ்வளவு சீரியஸா கேள்வி கேட்டிருக்கேன்… நீ சிரிப்பா காட்டுறியா?” என்றார்.
“இல்ல மிஸ்… இதுக்குப் பதில் எங்க அப்பாதான் மிஸ்…” என்றான் சுரேஷ்.
“அப்படியா? எப்படிப் உங்க அப்பா?” என்று ஆசிரியை கேட்டார்.
சுரேஷ் நிதானமாக,
“நீங்கதானே சொன்னீங்க… கண்மூடியும் நடக்குமாம் ன்னு. எங்க அப்பா கூட கண் மூடிட்டு நல்லா நடப்பாரு மிஸ்! வேணும்னா நம்ம கிளாஸ்ல இருக்கும் வீராசாமிய கேட்டு பாருங்க!” என்றான்.
இந்த முறை ஆசிரியரும் மாணவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.
ஆசிரியை சிரிப்பை அடக்கி, “சரிடா… உங்க அப்பா கண்மூடினாலும் நடப்பாரு. ஒத்துக்குறேன். ஆனா விடுகதையிலிருந்து மீதமுள்ள பகுதிகளுக்கும் பதில் சொல்லிட்டு ரப்பர் வாங்கிக்கிட்டு போ,” என்றார்.