சென்னை: விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு அலட்சியம் காட்டியதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்” என்ற நமது வேள்விப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அக்.14-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம் பகுதிக்குச் சென்றிருந்தேன்.
தாம்பரத்துக்குப் பல பெருமைகள் இருந்தாலும், திமுக ஆட்சியில் தாம்பரம் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, கடந்த ஆண்டில் தாம்பரம் மாநகராட்சி வழங்கிய கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து 3 அப்பாவி பொதுமக்கள் மாண்டு போன துயரம் தான்.
விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வோம் என பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றாதது மட்டுமன்றி, மக்களின் அடிப்படைத் தேவையிலும் அலட்சியத்தைக்காட்டி அவர்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கின்றது.
மழை வந்தால் வெள்ளத்தில் மிதப்பதும், மழை நின்றவுடன் குடிநீருக்கு அல்லாடுவதுமே தாம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல ஊர்களின் அவலநிலையாகிவிட்டது. இப்படிப்பட்ட அலங்கோல ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் அறிவாலயத்துக்கு, அடுத்தமுறை அரியணை என்பது எட்டாக்கனி தான். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.