விண்வெளித் துறையின் முன்னேற்றத்தால் இளைஞர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலியில் ஒலிபரப்பப்படும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று(ஆக. 25) பிரதமர் மோடி, மனதின் குரல் 113-வது எபிசோடில் இந்தியாவின் விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பாராட்டினார். விண்வெளித் துறையில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் நாட்டின் இளைஞர்கள் அதிகம் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி கொண்டாடப்பட்ட தேசிய விண்வெளி நாள் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்திப் பேசினார்.
“விக்சித் பாரதத்தின் அஸ்திவாரத்தை வலுப்படுத்தும் விதமாக 21 ஆம் நூற்றாண்டில் நிறைய நடைபெறுகிறது. உதாரணமாக, ஆகஸ்ட் 23 அன்று, அனைத்து நாட்டு மக்களும் முதல் தேசிய விண்வெளி நாளைக் கொண்டாடினர்.
மீண்டும், நீங்கள் அனைவரும் சந்திரயான் – 3 வெற்றியைக் கொண்டாட வேண்டும். கடந்த ஆண்டு, இதே நாளில், சந்திரனின் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள சிவ-சக்தி புள்ளியில் சந்திரயான்-3 தரையிறங்கியது, இந்த சாதனையை செய்த முதல் நாடு இந்தியாவாகும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்ட விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான கேலக்ஸியின் தலைவர்களுடனும் பிரதமர் பேசினார். அவர்களின் தொழில்நுட்பம் நாட்டுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதையும் மோடி கேட்டறிந்தார்.
கேலக்ஸியின் உறுப்பினரான சுயாஷ், ‘ஹைப்பர்லூப்’ திட்டத்தில் அவர்கள் பங்கேற்றதையும், உலகளவில் 1,500 அணிகளில் முதல் 20 அணிகளில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றதையும் குறிப்பிட்டு, தங்களது பயணத்தைப் பகிர்ந்து கொண்டார்.
நாட்டின் இளைஞர்கள் தற்போது இந்திய விண்வெளித் துறையில் தங்கள் எதிர்காலத்தை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்,” என்று பிரதமர் கூறினார்.
ஒரு துறையில் முன்னேற்றங்கள் ஏற்படும் போது, பல விளைவுகள் ஏற்படும் என்றும், அதனால் பலர் பயனடைகின்றனர் என்றும் பிரதமர் மோடி கூறி முடித்தார்.