விண்வெளி என்றால் எல்லாமே மாறுகிறது, அதிலும் குறிப்பாக மனித உடல் என்று எடுத்துக்கொண்டால் முற்றிலும் ஒரு மாறுபட்ட சூழல். புவிஈர்ப்பு விசை இல்லாததால், சுனிதாவின் தசைகளும், எலும்புகளும் தளர்வடையும். எலும்பின் அடர்த்தி குறையும்.
பிப்ரவரி மாதத்தில் அவர் பூமிக்குத் திரும்பியதும், தொடர்ச்சியாக அவர் உடல்நிலையை சீரமைப்பதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதும், உடலுக்கும், பலவீனமடைந்த எலும்புக்கும் பலம் பெறுவதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது வரும் என்று கூறப்படுகிறது.
முக்கியமாக, அதிக நாள்கள் விண்வெளியில் தங்கியிருப்பவர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படுமாம், அதாவது, கண்ணில் இருக்கும் நீரின் அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாட்டால் கோளாறு ஏற்பட்டு, சிலருக்கு தற்காலிகமாக பார்வை பறிபோகும் அபாயமும் ஏற்படலாம் என்கின்றன தகவல்கள்.
உடலில் திரவ அழுத்த மாறுபாட்டால், சிலருக்கு கால்கள் சுருங்கியும் தலைகளில் வீக்கமும் ஏற்படும் அபாயமும் உள்ளதாம். விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிய மூன்று நாள்களில் இந்த நிலைமை சரியாகும் என்பது எதிர்பார்ப்பு.
இதுபோன்ற பல்வேறு உடல்நல பிரச்னைகளும், உணர்வுப்பூர்வமான மன நலப் பிரச்னைகளும் ஏற்படும் அபாயங்களும் அதிக நாள்கள் விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.