Last Updated : 10 Oct, 2024 07:37 PM
Published : 10 Oct 2024 07:37 PM
Last Updated : 10 Oct 2024 07:37 PM
சென்னை: அஸ்ட்ரோசாட் விண்கலம் மூலமாக விண்வெளியில் நட்சத்திரத் துகள்களில் இருந்து பெரும் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் வானியல் ஆய்வுக்காக தயாரித்த அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 2015 செப்டம்பர் 28-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதேபோல் அமெரிக்காவின் நாசா மையம் சார்பில் சந்திரா விண்கலம் 1999-ம் ஆண்டு ஏவப்பட்டது. இவ்விரு தொலைநோக்கி கலன்களும் விண்வெளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம், நட்சத்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பல்வேறு அரிய தகவல்களை நமக்கு வழங்கி வருகின்றன.
இந்நிலையில் ஒரு பெரிய கருந்துளையைச் சுற்றியுள்ள நட்சத்திரத் துகள்களில் இருந்து நிகழ்ந்த பெரும் வெடிப்புகளை அஸ்ட்ரோசாட் மற்றும் சந்திரா விண்கலங்கள் ஒருசேர இணைந்து படம் பிடித்துள்ளன. பொதுவாக விண்வெளியில் காணப்படும் கருந்துளையானது அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டதாகும். அதனுள் ஏதேனும் பெருவெடிப்பு நிகழும்போது போட்டான் கூறுகள் வெளியேறி எக்ஸ் கதிர்கள் உருவாகும்.
அதன்படி 2019-ல் கருந்துளையின் ஈர்ப்பு விசைக்குள் மாட்டிக் கொண்ட நட்சத்திரம் ஒன்று வெடித்து அதன் சில பகுதிகள் கருந்துளை பாதையில் சுற்றி வருவது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தற்போது மற்றொரு நட்சத்திரம் அதே பகுதியில் சுற்றி வரும்போது ஏற்கெனவே வெடித்து சிதறிய விண்மீன் எச்சங்களுடன் அவ்வப்போது மோதிக் கொள்வதாக இஸ்ரோ கண்டறிந்துள்ளது. இந்த மோதலின்போது எக்ஸ்ரே கதிர்கள் வெளியேறுவதும் சந்திரா மற்றும் அஸ்ட்ரோசாட் விண்கலங்கள் வழங்கி தரவுகளின் மூலமாக உறுதிசெய்யப்பட்டுள்ளன.இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://www.isro.gov.in/ எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
FOLLOW US
தவறவிடாதீர்!