“விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் மகத்தான வளர்ச்சி…” – இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன் விவரிப்பு | India growth in space research will be significant – ISRO Scientist Rajarajan speech

1323351.jpg
Spread the love

திண்டுக்கல்: “அடுத்த 25 ஆண்டுகள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருக்கும்,” என இஸ்ரோ விஞ்ஞானி ஆர்.ராஜராஜன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் அருகே காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலையில், உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையம், பல்கலை நிர்வாகம் இணைந்து நடத்திய விண்வெளி குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று (அக்.8) பல்கலை அரங்கில் நடைபெற்றது.பல்கலை. துணைவேந்தர் என்.பஞ்சநதம் தலைமை வகித்தார். பல்கலை. பதிவாளர் எல்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இஸ்ரோ பொதுமேலாளர் ஜே.லோகேஷ் முன்னிலை வகித்தார்.

இதில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மைய இயக்குநர், இஸ்ரோ விஞ்ஞானி ஏ.ராஜராஜன் கலந்துகொண்டு பேசுகையில், “இந்த ஆண்டுக்கான விண்வெளி வாரம், ‘விண்வெளி மற்றும் காலநிலை மாற்றம்’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. அலைபேசி இன்று மக்களுடன் ஒன்றிப்போய் விட்டது. கை, கால்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை, அலைபேசி இல்லை என்றால் பதறும் மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். அலைபேசி கையில் இருந்தாலே உங்களின் தனித்தன்மை (பிரைவெசி) போய்விட்டது.

அலைபேசி மூலம் நமது எண்ணங்கள் கூட வெளியில் தெரியவருகிறது. இதற்குக் காரணம், டெக்னாலஜி தான். ஜிபிஎஸ் மூலம் நீங்கள் எங்கு சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதை முதற்கொண்டு கண்காணிக்க முடியும். இதுபோன்ற தொழில்நுட்பங்களை நல்லமுறையில் செயல்படுத்தினால் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏதுவாக இருக்கும். பூமியில் உள்ள காலநிலை, மழை எப்பொழுது வரும், குறிப்பிட்ட பகுதியில் என்ன விவசாயம் செய்யலாம். காற்றில் ஈரப்பதம், எந்த பகுதியில் என்ன வளங்கள் உள்ளது என தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து செயல்படுவதன் மூலம் பூமியை பாதுகாக்கலாம்.

முந்தைய ஆண்டுகளில் சீராக தொடர்ந்து மழை பெய்யும். ஆனால் தற்போது, சிறிது நேரமே பெய்தாலும் கனமழையாக பெய்து நின்றுவிடுகிறது. இதற்கும் காலநிலை மாற்றம் தான் காரணம். இங்குள்ள காலநிலை வேறு எங்கோ பாதிப்பை ஏற்படுத்தும். நாம் உயிரோடு இருக்க எதுவும் தேவையில்லை.காடுகளுக்கு சென்றால் கனி, காய்கள் கிடைக்கும். வாழ்க்கைக்கு எதுவும் தேவையில்லை. மற்ற உயிரினங்கள் தேவையானவற்றை உண்டு வாழ்கின்றன. அவற்றிற்கு மற்ற தேவைகள் எதுவும் இல்லை. ஆனால், நமது ஆறாம் அறிவு சிந்திப்பதால் தேவைகளை அதிகரித்துக் கொண்டுள்ளோம்.

மூன்று, நான்கு தலைமுறைகளை நாம் நினைவு வைத்துக்கொள்ளலாம். அதற்கு முன்பு நம்முன்னோர்கள் யார் என்றே நமக்கு தெரியாது. ஏழு தலைமுறைக்கு பின்னர் ஜீன் மாறுபாடு அடையும் என்கின்றனர். பூமி என்பது ஒரு தூசுகூட கிடையாது. அதில் நாம் இருக்கிறோம். பூமியில் அனைவருக்கும் தேவையானவை உள்ளது. விவசாயிகள் காலநிலையை அறிந்து பயிரிட்டால் அதிக விளைச்சல் பெறலாம். அதற்கு தொழில்நுட்பம் உதவுகிறது. அடுத்த நூறு ஆண்டுகளில் மில்லியன் மக்கள் விண்வெளியில் வசிக்கும் நிலை ஏற்படும்.

அடுத்த 25 ஆண்டுகள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அதிக மக்களின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பும் வகையில் செயல்பட வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் செயல்பட்டால் மாணவர்களாகிய நீங்கள் வெற்றிபெற்றலாம்” என்று அவர் பேசினார்.

வானியல், விண்வெளி, ராக்கெட்டுகள், செயற்கைக்கோள் மற்றும் பல தசாப்தங்களாக இஸ்ரோவின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் காட்டும் ராக்கெட் மாதிரிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கண்காட்சியை கண்டுகழித்தனர். இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக நாளை (அக்.9) விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம் நடைபெறவுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *