புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி புதுச்சேரி, காரைக்காலில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு விழாவானது, புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆலயங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “நம்ம சாமி நம்ம கோவில் நாமே பாதுகாப்போம்” என்னும் பெயரில் கொண்டாடப்பட இருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி வெங்கடா நகர் தமிழ்ச் சங்கத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்துக்கு விநாயகர் சதுர்த்தி விழா பேரவை தலைவர் குமரகுரு தலைமை வகித்தார். பொதுச்செயலர் சனில்குமார் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் பசுபதி, நாகமணி, துளசி மதிவாணன், ஸ்ரீதரன், பொருளாளர் செந்தில் முருகன், செயலாளர்கள் சோழன், ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றார்கள்.
இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் நிர்வாகிகள் கூறியதாவது: ”விநாயகர் சதுர்த்தி விழாவை வீதி எங்கும் கொண்டாட, ராம கோபாலன் முயற்சி எடுத்தார். இதன் பலனாக விநாயகர் சதுர்த்தி விழாவானது வெகுஜன இயக்கமாக மாறி கடந்த 40 ஆண்டு காலமாக இந்து முன்னணி சார்பில் புதுச்சேரியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளை புறம் தள்ளி அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுபட்டு பொது வெளியில் ஒற்றுமையாக ஊர்வலமாக செல்வதற்கு விநாயகர் சதுர்த்தி விழா முன் உதாரணமாக திகழ்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அன்னதானம், மாணவ, மாணவிகளின் திறன் வளர்க்கும் விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு சேவைப் பணிகள் புதுச்சேரி முழுவதும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு விழாவானது, புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆலயங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “நம்ம சாமி நம்ம கோவில் நாமே பாதுகாப்போம்” என்னும் பெயரில் கொண்டாடப்பட இருக்கிறது. மூன்றடி முதல் 21 அடி வரை விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்கு வைக்கப்பட உள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு துணை நிலை ஆளுநர், முதல்வர், பேரவைத் தலைவர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு கொடுப்பது தொடர்பாக ஆலோசித்தோம்” என்று நிர்வாகிகள் கூறினர்.