சென்னை: சென்னையில் 31-ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்து முன்னணி 1980-ல் ராம கோபாலனால் தொடங்கப்பட்டது. 1983-ம் ஆண்டு சென்னையில் ஒரே ஒரு விநாயகர் சிலையை வைத்து ஓரிடத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி பொது விழாவை தொடங்கினோம். தற்போது தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து இந்து முன்னணி சார்பில் விழா எடுத்து கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்து முன்னணி சார்பில் நம்ம சாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம் என்ற கருப்பொருளோடு இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. சென்னையில் 5 நாட்கள் நடக்கும் விழா, ஆக.31-ம் தேதி விசர்ஜனம் ஊர்வலத்துடன் நிறைவு பெறுகிறது.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஒன்றைரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து விழா நடத்திய நிலையில், இந்தாண்டு அதை விட அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து கொண்டாட இருக்கிறோம். சென்னையில், கடந்த ஆண்டு 5,501 சிலைகள் வைக்கப்பட்ட நிலையில், இந்த முறை புதிதாக பல இடங்களில் விநாயகர் பிரதிஷ்டை செய்து கொண்ட இருக்கிறோம்.
அதேபோல், தமிழகம் முழுவதும் சிறிய அளவிலான சிலைகள் 15 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகளில் வைத்து வழிபட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய பல்வேறு வகையில் தடை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், அதையும் மீறி மக்கள் ஒத்துழைப்போடு விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடந்து வருகிறது.
தமிழக அரசு ரம்ஜானுக்கு இஸ்லாமியர்களுக்கு இலவசமாக அரசி கொடுப்பது போல, விநாயகர் சதுர்த்திக்கு அனைவருக்கு விநாயகர் சிலைகளை வழங்க வேண்டும். ரம்ஜான், பக்ரீத் பண்டிகளுக்கு முதல்வர் வாழ்த்து சொல்லி, அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதேபோல, இந்தாண்டு சென்னையில் 31-ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் நேரம் வழங்கினால், அவரை சந்தித்து அழைப்பு கடிதம் கொடுப்போம். மதுரை மாநாட்டுக்கும் அவருக்கு அழைப்பிதல் கொடுக்க அனுமதி கேட்டோம். ஆனால், அவர் அனுமதி வழங்கவில்லை. அதேபோல், தற்போது முதல்வர் ஸ்டாலின் அனுமதி கொடுப்பாரா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது மாநில செயலாளர் மணலி மனோகர், மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன் உடன் இருந்தனர்.