வினேஷ் போகத்தின் வெற்றிக்கு எனது பெயர் உதவியது: பிரிஜ் பூஷண் சிங்!

Dinamani2f2024 10 082f5r454tbj2fvinesh.jpg
Spread the love

கடந்த மாதம் காங்கிரஸில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஜூலானா சட்டப்பேரவைத் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் யோகேஷ் குமாரை தோற்கடித்து வெற்றியைப் பதிவு செய்தார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் எம்பியும், முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் பேசுகையில், “என் பெயரைப் பயன்படுத்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். இதனால், நான் ஒரு பெரிய மனிதன் என்று அர்த்தம்.

வினேஷ் போகத் எங்கு சென்றாலும் அழிவு அவரைப் பின்தொடர்கிறது. அது எதிர்காலத்திலும் நடக்கும். அவர் தானாக தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது. இந்த மல்யுத்த வீரர்கள் ஹரியாணாவிற்கு கதாநாயகர்கள் அல்ல. ஆனால், அவர்கள் வில்லன்கள்.

நாட்டில் காங்கிரஸின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ராகுல் காந்தியின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து வருகின்றன. நாட்டு மக்கள் தங்களை நிராகரித்துள்ளனர் என்பதை இப்போது காங்கிரஸ் ஏற்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாஜகவின் யோகேஷ் குமாரைவிட 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வினேஷ் போகத் 65,080 வாக்குகளும், யோகேஷ் குமார் 59, 065 வாக்குகளும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் சுரேந்தர் 10,158 வாக்குகளும் பெற்றனர். ஆம் ஆத்மியின் கவிதா ராணி 1,280 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து கடந்தாண்டு போராட்டத்தை நடத்தினர். இந்தச் சர்ச்சை காரணமாக கைசர்கஞ்ச் தொகுதியில் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு பாஜகவில் சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அவரது மகன் கரண் பூஷன் சிங் மக்களவைத் தேர்தலில் பாஜக களமிறக்கியது. அவரும் 1.48 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜவாதி கட்சியின் பகத்ராமை தோற்கடித்து வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *