விபத்துகளால் ரத்தாகும் சென்னை ரயில்கள்: சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தை பயன்படுத்த வலுக்கும் கோரிக்கை | People, Activists insists on using Salem – Viruthachalam expressway extensively

1369256
Spread the love

சேலம்: ரயில் விபத்துகளின்போது சேலம் – அரக்கோணம் – சென்னை ரயில் தடத்தில் இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுவதால், ரயில் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. எனவே, சேலம் – சென்னை இடையிலான 2-வது ரயில் பாதையாக இருக்கும் சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தை முழுமையாக பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட வேண்டும் என்று ரயில்வே ஆர்வலர்களும், பயணிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

தெற்கு ரயில்வேயில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெரிதும் பயனடையும் வழித்தடங்களாக இருப்பது, சென்னை- அரக்கோணம்- சேலம் வழித்தடம் மற்றும் சென்னை- விருத்தாசலம் வழித்தடம் ஆகியவையே. இதில், சென்னை- அரக்கோணம்- சேலம் ரயில்வே வழித்தடமானது, கேரள மாநிலத்தின் பல்வேறு நகரங்களை சென்னையுடன் இணைப்பதாக இருக்கிறது. இதேபோல், சென்னை- விருத்தாசலம் ரயில்வே வழித்தடமானது, தென் மாவட்டங்களை சென்னையில் இணைக்கிறது.

இந்நிலையில், விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனை சேலத்துடன் இணைக்கும் சேலம்- விருத்தாசலம் ரயில்வே வழித்தடம், தெற்கு ரயில்வேயின் முக்கியத்துவம் இன்றி, பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் இயக்கத்துக்கு மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று ரயில்வே ஆர்வலர்கள் மற்றும் ரயில் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, சென்னை- அரக்கோணம்- சேலம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்படும்போது, ரயில் பயணிகள் பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: சென்னை- அரக்கோணம்- சேலம் வழியாக, இன்டர் சிட்டி, வந்தே பாரத், சதாப்தி உள்பட பல விரைவு ரயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் பல ஆயிரம் பயணித்து வருகின்றனர். ஆனால், சென்னை- அரக்கோணம்- சேலம் ரயில் பாதையில் விபத்து, பராமரிப்பு போன்ற காரணங்களால், ரயில் சேவை நிறுத்தப்படும்போது, ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.

அதிலும், திடீரென பல ரயில்கள் ரத்து செய்யப்படும்போது, பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக, நீதிமன்ற பணி, மருத்துவம், வியாபாரம் போன்றவற்று திட்டமிட்டு புறப்படுபவர்கள், ரயில்கள் திடீரென ரத்து செய்யப்படும்போது, தொலைதூரத்தில் இருந்து சென்னை வந்து செல்வதில் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தப் பிரச்சினைக்கு மாற்று ஏற்பாடாக, விருத்தாசலம்- சேலம் வழித்தடத்தில் புதிய ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்கினால், ரயில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். சென்னை- விருத்தாசலம் இடையே இரட்டை ரயில் பாதை உள்ளது.

விருத்தாசலம்- சேலம் இடையே ஒற்றை வழித்தடமாக இருந்தாலும், இந்த வழித்தடத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயக்கப்படுவதால், பெரிய சிக்கல் ஏதும் இல்லை. பெரும்பலான ரயில்கள் மின்சார இன்ஜினுடன் இயக்கப்படும் நிலையில், சேலம்- விருத்தாசலம் வழித்தடம் மின்சார மயமாக்கப்பட்டு, இருப்பது கூடுதல் வசதி. சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தில் ஒவ்வொரு 3 ரயில் நிலையத்துக்கு நடுவில் உள்ள 2 வது ரயில் நிலையமும், ஒரே நேரத்தில் 2 ரயில்கள் நின்று செல்லக்கூடிய கிராசிங் ரயில் நிலையங்களாக இருப்பதால், ஒற்றை வழித்தடமாக இருந்தாலும், ரயில்களை பாதுகாப்பாக இயக்க வசதி உள்ளது.

இவ்வளவு வசதிகள் இருந்தும், சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தில் சென்னை- சேலம் இடையே பண்டிகை மற்றும் விடுமுறை கால சிறப்பு ரயில்கள் கூட இயக்கப்படுவதில்லை. ஆனால், ரயில் விபத்து காலங்களில் கூட, மாற்று வழித்தடமாக சேலம்- விருத்தாசலம் ரயில் பாதையை பயன்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் முன்வராமல் இருப்பது, ரயில் பயணிகளுக்கு பாதிப்பாகவே இருக்கிறது.

எனவே, சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தில் சென்னை- சேலம் வழியாக புதிய ரயில்களை இயக்கவும், பண்டிகை மற்றும் விடுமுறை கால சிறப்பு ரயில்களை இயக்கவும் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் தொகுதி எம்பி.,க்கள், மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏ.,க்கள் இதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *