விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்ததில் குற்றவாளி எனச் சந்தேகிக்கப்படும் நபர் நாக்பூர் போலீஸிடம் சரணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களில் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்தன. அதில், பெரும்பாலனவை சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் வந்தவை. கடந்த அக். 22 அன்று மட்டுமே 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இந்த மிரட்டல்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த நபர் மகாராஷ்டிரத்தின் கோன்டியா மாவட்டத்தில் வசிக்கும் ஜக்தீஷ் உக்கி (35) என்பது தெரியவந்தது.
இவர், கடந்த அக். 21 அன்று ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்னவி மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியதால் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இதையும் படிக்க | கார்ன் பிளேக்ஸ் பெட்டிகளில் கஞ்சா கடத்தல்!
கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பின்னர் கைது செய்யப்பட்டார். 11 ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தீவிரவாதம் குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
துணை கமிஷனர் ஸ்வேதா கேட்கர் தலைமையிலான விசாரணையில், இவர் தொடர்ந்து நட்சத்திர விடுதிகள், விமான நிலையங்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவரை தேடிய போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாரு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், நாக்பூர் போலீஸிடம் நேற்று (அக். 31) மாலை அவர் சரணடந்ததாகப் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.