மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் முன்பதிவு செய்திருந்த ரூ.600 கோடிக்கும் அதிகமான பணத்தை இண்டிகோ நிறுவனம் திரும்ப கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வதோதராவிற்கு புறப்பட இண்டிகோ விமானம் ஒன்று தயாராகிக்கொண்டிருந்தது. பயணிகள் வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தனர். அந்நேரம் திடீரென புறா ஒன்று விமானத்திற்குள் நுழைந்துவிட்டது.
அந்த புறா உள்ளே நுழைந்தவுடன் எப்படி வெளியில் செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது.
புறாவை பிடிக்க விமான பணிப்பெண்களும், ஊழியர்களும் ஓடினர். அனைவருக்கும் புறா தண்ணி காட்டி ஓடிக்கொண்டிருந்தது.
விமான பணிப்பெண்களோடு சேர்ந்து சில பயணிகளும் புறாவை பிடிக்க முயன்றனர். விமான ஊழியர்கள் புறாவை ஓடி ஓடி பிடிக்க முயற்சி செய்ததை பயணிகள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர்.
எப்படியோ போராடி புறாவை வெளியில் விரட்டினர். அந்த வீடியோவை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது.