டெல்லி விமான நிலையத்தில் பல மணி நேரமாக காத்துக் கிடக்கும் ஒரு தந்தை, தனது மகள் ரத்தப்போக்கால் அவதிப்படுகிறாள் என்றும், சானிடரி நாப்கின் கொடுக்கும்படி இண்டிகோ ஊழியர்களிடம் கெஞ்சிய காட்சி வைரலாகியுள்ளது.
இதேபோன்று, பெங்களூரு விமான நிலையத்தில் நம்ரதா என்ற பெண் தனது தந்தையின் அஸ்தியை கரைக்க ஹரித்வார் செல்லவேண்டும் என்பதால், அஸ்தியுடன் விமான நிலையம் வந்திருந்தார். ஆனால், அவர் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் டெல்லி சென்று அங்கிருந்து டேராடூன் செல்ல வேண்டும். என் தந்தையின் அஸ்தியை ஹரித்வாரில் கரைக்க வேண்டியுள்ளது,” என்றும் தெரிவித்தார்.
தொடர் விமான சேவை ரத்துகள் தொடர்ந்து நடைபெறுவதால், இது குறித்து மத்திய அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் 109 விமான சேவைகள், டெல்லியில் 86, அகமதாபாதில் 19, பெங்களூரு விமான நிலையத்தில் 50, ஐதராபாத்தில் 69 விமான சேவைகள் என, நாடு முழுவதும் 1,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.