விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்: ரூ.1,964 கோடியில் ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு | Metro Rail Extend Plan at Airport – Kilambakkam: Govt Order approving Issue Rs.1,964 Crore

Spread the love

சென்னை: சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ நிலையம் வரை விரிவாக்கத் திட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற பணிகள் மேற்கொள்ள, ரூ.1,963.63 கோடி செலவில் ஒப்புதல் வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, விமான நிலையம் – கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டம் அறிவிக்கப்பட்டு, நீண்ட காலமாக ஒப்புதல் கிடைக்காமல் இருந்து வந்தது.

அதே நேரத்தில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது, இத்திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இந்த 3 வழித்தடங்களில் 2 வழித்தடங்கள் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்து விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து, இத்திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.9.445 கோடி செலவாகும் எனவும், 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் எனவும் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. தொடர்ந்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விரிவாக்கத் திட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற பணிகளுக்காக, ரூ.1,963.63 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தல் செயல்முறையைத் தொடரவும், பயன்பாட்டு மாற்றம் மற்றும் பிற ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

நிலம் கையப்படுத்தல் பணி, சாலை பணி, நிலப்பரப்பு ஆய்வுகள், புவி தொழில்நுட்ப விசாரணை, தடுப்புகள், மரம் வெட்டுதல், மறு நடவு மற்றும் குடிமைப் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் ரூ.1,963.63 கோடி செலவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *