சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விம்கோ நகர் – விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மாலை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்.
சென்னையில் விம்கோ நகர் – விமான நிலையம் வரையிலான வழித்தடம், சென்ட்ரல் – பரங்கிமலை வரையிலான வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் காலை, மாலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த நேரங்களில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், விம்கோநகர் – விமான நிலையம் நீல நிற வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மாலை 5.55 மணி அளவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் சென்ட்ரல் – விமான நிலையம் வரையிலான தடத்தில் மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில், சென்ட்ரல் – பரங்கிமலை பச்சை நிற வழித்தடத்தில் வழக்கம்போல மெட்ரோ ரயில்கள் இயங்கின. இதற்கிடையில், விம்கோ நகர் – விமான நிலையம் வரையிலான நீலநிற வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மாலை 6.20 மணிக்கு சரி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயங்கின. மெட்ரோ ரயில் சேவை பாதிப்பால், பயணிகள் சிறிது நேரம் சிரமத்தை சந்தித்தனர்.