சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின் 28. இவர் நேற்று காலை 11:00 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் எனது வீட்டில் கட்டைகளை அடுக்கி வைத்திருப்பதாகவும் இதனால் எனக்குத் தொந்தரவாக இருப்பதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் செம்பியம் போலீசார் இதுகுறித்து சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தபோது அந்த வீட்டில் அட்டைப்பெட்டியில் நிறைய கட்டைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதனை சோதனை செய்தபோது அவை அனைத்தும் செம்மரம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வீட்டிலிருந்து சுமார் 960 கிலோ மதிப்பிலான செம்மரக்கட்டைகளைச் செம்பியம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து செம்மரக்கட்டைகளைப் பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது ரசூல் 54 என்ற நபரை கைது செய்த செம்பியம் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முகமது ரசூல் ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரக்கட்டைகளைக் கொண்டு வந்து வெளியிடங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. செம்பியம் போலீசார் வனத்துறை அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளையும் முகமது ரசூலையும் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.