சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் தந்தையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவருமான விக்கிரமராஜா, அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வியாபாரிகளின் கோரிக்கைகளை மனுவாக அளித்திருப்பது அரசியல் ஏரியாவில் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பலம் பொருந்திய அமைப்பாக இருந்த போது மறைந்த த. வெள்ளையன், விக்கிரமராஜா இருவருமே அதன் நிர்வாகிகளாக இருந்தனர்.
அந்தக் காலத்தில், த. வெள்ளையன் அதிமுக அனுதாபியாக இருப்பதாக கருதிய மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, விக்கிரமராஜா வெள்ளையனிடமிருந்து பிரிந்து “வணிகர் சங்கங்களின் பேரமைப்பு’ என தனிச் சங்கத்தை உருவாக்கியதாகப் பேசப்பட்டது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ‘கருணாநிதியே வியாபாரிகள் சங்கத்தை உடைத்தார்’ என பகிரங்கமாகவே பேசியிருக்கும் காணொலிகளை இப்போதும் காணலாம்.
தனிச் சங்கம் கண்ட பிறகு தொடர்ந்து திமூக ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு.

ஒவ்வொரு வருடமும் வணிகர் தினமான மே 5 ம் தேதி திமுகவைச் சேர்ந்தவர்களையே அழைத்து மாநாடுகள் நடத்தி வந்திருக்கிறார் விக்கிரமராஜா.
இந்த நிலையில்தான் 2021 சட்டசபைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அவரது மகன் பிரபாகர் ராஜா.
விக்கிரமராஜா என்றாலே திமுக சார்பு என்கிற ஒரு பார்வை இருக்கும் பட்சத்தில் தற்போது, அதுவும் தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்திருப்பதால் இந்தச் சந்திப்பு சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.